Friday, June 5, 2020

Madan Mohan Malavia



ந்த படத்தில் இருப்பவர் தான் பண்டித மதன் மோகன் மாளவியா அவர்கள்.

இவர் 1909, 1918, 1932, 1933 ஆகிய ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தவர். அதுமட்டுமல்லாது இவர்

  • விடுதலைப் போராட்ட வீரர்
  • சமூக நீதி போராளி
  • வழக்கறிஞர்
  • கல்வியாளர்
  • பத்திரிக்கையாளர்
         இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வான செளரி செளரா நிகழ்வின் பொழுது மரணத் தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு தன்னுடைய வாதத் திறமையால் வாதாடி விடுதலைப் பெற்றுத் தந்த ஒரு வழக்கறிஞர். இவ்வாறு பன்முக பரிமாணம் கொண்டவர் மதன் மோகன் மாளவியா அவர்கள். மக்கள் சரியான கல்வி அறிவு இல்லாமல் இருப்பது தான் நாம் ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்று நினைத்து “பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்” என்று ஒரு பல்கலைக்கழகத்தையே உருவாக்க வேண்டும் என்று நினைத்தார். 

ஒரு பல்கலைக்கழகத்தையே உருவாக்குவது என்றால் அது என்ன சாதாரண விஷயமா? எவ்வளவு பணம் தேவைப்படும்? அதனால் நிதி திரட்டுவதற்காக பல அரசர்கள், செல்வந்தர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலபேரை சந்தித்து நன்கொடை வசூலித்துக் கொண்டிருந்தார். 

அந்த வகையில், மாளவியா அவர்கள் ஹைத்ராபாத் நிஜாம் அரண்மனைக்கு சென்று பல்கலைக்கழகம் ஆரம்பிக்க நிஜாமிடம் நிதி கேட்டார். 

ஹைத்ராபாத் நிஜாமோ “என்ன தைரியம் இருந்தால், ஒரு இந்து பல்கலைக்கழகம் ஆரம்பிக்க என்னிடமே நிதி கேட்டு வந்துருப்ப?” என்று கேட்டுவிட்டு தன் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழட்டி மதன்மோகன் மாளவியா மீது தூக்கி எறிந்தார்.

மதன்மோகன் மாளவியா அவமானத்தில் கூனிக்குறுகி போகப் போறார் என்று நிஜாம் நினைத்தார். அமைச்சரவையில் இருந்தவர்கள், மதன்மோகன் மாளவியா நிஜாமைக் கோவத்தில் திட்டப் போகிறார் என்று நினைத்தார்கள். ஆனால், மாளவியா அவர்களோ அந்த இரண்டையுமே செய்யவில்லை.

மிகவும் அமைதியாக குனிந்து அந்த செருப்பை எடுத்த மாளவியா ”நன்றி நிஜாம்” என்று சொல்லிவிட்டு அந்த அரண்மனையை விட்டு வெளியே வந்துவிட்டார்.

வெளியே வந்த மாளவியா அவர்கள் மக்கள் அதிகம் புழங்கக்கூடிய ஹைத்ராபாத் பஜார் உள்ளே சென்று அந்த செருப்பை மக்களிடம் ஏலம் விட ஆரம்பித்தார்.

“இது ஹைத்ராபாத நிஜாம் அவர்களுடைய விலையுயர்ந்த, அழகிய, அதிக வேலைப்பாடுகள் அமைந்த செருப்பு. இதன் ஆரம்பவிலை வெறும் 10 பைசா” என்று சொல்லி ஏலம் விட ஆரம்பித்தார்.

அழகிய வேலைப்பாடு அமைந்த அந்த செருப்பை பார்த்த மக்கள், அந்த செருப்பை ஏலத்தில் எடுக்க ஆர்வமாக கலந்துக் கொண்டார்கள். 

இதனையெல்லாம் அங்கிருந்துப் பார்த்துக் கொண்டிருந்த அரண்மனை சிப்பாய் ஒருவன் நிஜாமிடம் வேகமாக ஓடிசென்று “உங்களுடைய செருப்பு பஜாரில் ஏலம் விடப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று சொன்னான்..

“அப்படியா.. எவ்வளவு ஏலத்திற்கு போகிறது” என்று நிஜாம் கேட்டார்.

“ஆரம்பவிலையே வெறும் 10 பைசா தான்” என்று அந்த சிப்பாய் சொன்னான். 

அவருக்கு அதிர்ச்சி. நம்முடைய செருப்பு இவ்வளவு குறைவான விலைக்கு ஏலத்திற்கு சென்றால் அது நமக்கு தான் அவமானம் என்று நினைத்தார்.

உடனே அந்த சிப்பாயிடம் பல இலட்சம் ரூபாய் கொடுத்து ”அந்த செருப்பை நீ ஏலத்தில் எடுத்துவிட்டு வா” என்று சொல்லி அனுப்பினார்.

அந்த சிப்பாயும் அந்த மிகப் பெரிய தொகையைக் கொடுத்து அந்த செருப்பை ஏலத்தில் வாங்கிக் கொண்டு வந்தான்.

பிறகு அந்த பெரிய தொகையை ஹைத்ராபாத் நிஜாம் பெயரிலேயே நன்கொடையாக சேர்த்தார் மதன் மோகன் மாளவியா அவர்கள்.

1916 ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டுமல்லாது ஆசியாவிலேயே மிகப்பெரிய பல்கலைக்கழகமான 4000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனாரஸ் பல்கலைக் கழகத்தை நிறுவினார் மாளவியா அவர்கள்..

Image: Banaras Hindu University


பார்த்தீர்களா? மாளவியா அவர்கள் எவ்வாறு மாத்தி யோசித்தார் என்று..

இந்த நிகழ்வினைப் படிக்கும்பொழுது எனக்கு ஒரு வாக்கியம் நினைவிற்கு வந்தது.

“சூழ்நிலைகள் உங்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை. அந்த சூழ்நிலையில் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளே உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்”

எந்தவொரு கடுமையான சூழ்நிலையிலும் நாம் எப்படி தீர்மானிக்கிறோம் என்பதைப் பொறுத்து தான் நம் வாழ்வில் லாபமும் நஷ்டமும் நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல,

“Life is 10% what happens to you and 90% how you react to it"

நிஜாம் செருப்பைத் தூக்கி எறிந்ததும், மாளவியா கோபப்பட்டிருந்தாலோ, 'நமக்கு எதுக்கு இந்த வேண்டாத நன்கொடை வசூலிக்கும் வேலை' என்று ஒதுங்கிப் போயிருந்தாலோ அவர் இலட்சியத்தை அவரால் அடைந்திருக்க முடியுமா?  ஆனால், அவர் சிறிது வித்தியாசமாக யோசித்தார். அதனால் தான் 100 வருடங்களுக்குப் பிறகும் நாம் அவரைப் பற்றி படிக்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் என்ன அவமானம் வேண்டுமானாலும் நடக்கலாம்.  அந்த அவமானத்தை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது. நீங்களும் மாளவியா போல் சிறிது வித்தியாசமாக யோசியுங்கள். அதில் சிறிது பொதுநலமும் கலந்திருக்கட்டும். நாளை உங்களையும் சரித்திரம் பேசும்.

All the best 


4 comments: