1963 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் கருப்பினத்தைச் சார்ந்த ஒரு குடும்பம் வாழ்ந்துக் கொண்டிருந்தது. அப்பா, அம்மா மற்றும் நான்கு குழந்தைகள் என்று பெரிய குடும்பம் அது. பெரிய குடும்பம் என்பதால் குடும்பத் தலைவரின் ஊதியம் போதவில்லை.
அதனால், அந்த அப்பா தன்னுடைய 13 வயது மகன் மைக்கேலை அழைத்து
அவன் கையில் ஒரு பழைய துணியைக் கொடுத்து “இந்த துணியின் மதிப்பு எவ்வளவு இருக்கும்?” என்று கேட்டார்.
மைக்கேல் அந்த பழைய துணியைப் பார்த்துவிட்டு “ஒரு டாலர் மதிப்பு கூட இருக்காது” என்று சொன்னான்.
“உன்னால் மட்டும் இந்த துணியை இரண்டு டாலருக்கு விற்க முடிந்தால் அது நீ நம்முடைய குடும்பத்திற்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்” என்று அந்த அப்பா சொன்னார்.
“இரண்டு டாலருக்கா? இந்த பழையத் துணியை ஒரு டாலருக்கு விற்பதே கஷ்டம். நீங்க என்னடானா, இரண்டு டாலருக்கு விற்க சொல்றீங்களே.. Its impossible dad” என்று சொன்னான் மைக்கேல்.
“முதலில் நீ முயற்சி செய்துப் பாரு..முயற்சி செய்யாமலேயே முடியாதுனு சொல்லாத” என்று மைக்கேலின் அப்பா ஊக்கம் அளித்தார்.
'சரி. அப்பா இவ்வளவு சொல்றாங்களே..' என்று யோசித்து அந்த பழைய துணியை விற்க முடிவு செய்தான் மைக்கேல்.
முதலில் அந்த பழைய துணியை சுத்தமாக துவைத்து ஒரு புது துணிபோல் மாற்றினான். பிறகு அந்த துணியை அயர்ன் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், அயர்னிங் கொடுக்கும் அளவுக்கு அவன் கையில் காசு இல்லாத காரணத்தால், பல மரப்பலகைகளுக்கு நடுவில் அந்த துணியை மடித்து வைத்து அந்த துணியை அயர்ன் செய்தது போல் மாற்றினான்.
அதன் பிறகு, ’எந்த இடத்தில் இந்த துணியை இரண்டு டாலருக்கு விற்க முடியும்?’ என்று யோசித்தான். பல மணி நேரம் யோசித்து பல இடங்களை யோசித்தபிறகு அவனுக்கு சரியெனபட்ட இடம் ’இரயில் நிலையம்’
நியூயார்க் நகரத்தில் இருக்கக்கூடிய ஒரு இரயில்வே ஸ்டேஷன் பிளாட்ஃபார்மில் நின்றுக் கொண்டு அந்த துணியை மைக்கேல் கூவிக்கூவி விற்க ஆரம்பித்தான். தொடர்ந்து மைக்கேல் கால் வலிக்க அங்கேயே நின்று கூவிக் கொண்டே இருந்தான்.
இரண்டு மணி நேரமாச்சு....
நான்கு மணி நேரமாச்சு...
யாருமே அந்த துணியை வாங்க முன்வரவில்லை. அப்படியே வந்தாலும் இரண்டு டாலருக்கு அந்த துணியை வாங்க சம்மதிக்கவில்லை. இறுதியாக ஆறு மணி நேரத்திற்கு பிறகு இரண்டு டாலருக்கு அந்த துணியை வாங்க ஒருவர் முன்வந்தார்.
அந்த இரண்டு டாலர் அவனுக்கு கிடைத்ததும் அவன் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவனது அப்பாவும் தன் மகன் ஒரு பழைய துணியை இரண்டு டாலருக்கு விற்றதை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டார்.
பிறகு கொஞ்சநாள் கழித்து மறுபடியும் மைக்கேலின் அப்பா இன்னொரு பழையத் துணியைக் கொண்டு வந்து, “இந்த துணியை உன்னால் 20 டாலருக்கு விற்க முடியுமா?” என்று கேட்டார்.
”20 டாலருக்கா..? வாய்ப்பே இல்லப்பா.. இந்த துணியை இரண்டு டாலருக்கு விற்பதே கஷ்டம்.. இந்தப் பழைய துணியை 20 டாலருக்கு யாரும் வாங்க மாட்டார்கள்.” என்று மைக்கேல் சொன்னான்.
”எனக்கும் தெரியும் மைக்கேல். நீ எல்லோரையும் போல் சாதாரணமாக இந்த துணியை விற்க நினைத்தால் உன்னால் இந்த துணியை விற்க முடியாது. சிறிது வித்தியாசமாக நீ யோசித்தால், உன்னால் இந்த பழைய துணியைக் கண்டிப்பாக 20 டாலருக்கு விற்க முடியும்” என்று மைக்கேலின் அப்பா சொன்னார்.
“சரி.. முயற்சி பண்றேன்ப்பா...” என்று மைக்கேல் சொல்லிவிட்டு ஒவ்வொரு நொடியும் ”இந்த துணியை எப்படி 20 டாலருக்கு விற்கலாம்?” என்று யோசித்துக் கொண்டே இருந்தான்.
திடீரென்று அவன் மூளையில் மின்னல் வெட்டியது போல் ஒரு ஐடியா தோன்றியது.
அவனுடைய நண்பன் ஒருவனுக்கு அழகாக ஓவியம் வரையத் தெரியும். அவனிடம் சொல்லி இந்த துணியில் அழகாக ஓவியம் வரைந்த பிறகு இந்த துணியை 20 டாலருக்கு விற்கலாம் என்று முடிவெடுத்தான் மைக்கேல்.
மைக்கேலின் நண்பனும் மைக்கேலுக்காக அந்த துணியில் டொனால்ட் டக் பொம்மையும், மிக்கி மவுஸ் பொம்மையும் வரைந்துக் கொடுத்தான்.
அடுத்ததாக 'இந்த துணியை எங்கு 20 டாலருக்கு விற்க முடியும்?' என்று யோசித்தான் மைக்கேல். பழையபடி இரயில்வே நிலையத்தில் விற்காமல், டொனால்ட் டக் பொம்மையும், மிக்கி மவுஸ் பொம்மையும் இருக்கிறது என்பதால் அது பள்ளிக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால், இந்த துணியை ஏதாவது பள்ளிக்கூடத்திற்கு முன்பு விற்கலாம் என்று முடிவெடுத்தான் மைக்கேல்.
மைக்கேல் பள்ளிக்கூடத்திற்கு முன்பு அந்த துணியை விற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பணக்காரர் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு மிக்கி மவுஸ் பொம்மையும், டொனால்ட் டக் பொம்மையும் பிடிக்கும் என்பதால் அந்த துணியை 25 டாலர் கொடுத்து வாங்கினார்.
அந்த பணத்தை எடுத்துக் கொண்டு அப்பாவிடம் கொண்டு சென்று கொடுத்தான் மைக்கேல். அப்பாவிற்கு ஒரே மகிழ்ச்சி. காரணம், அந்த 25 டாலர் என்பது மைக்கேல் அப்பாவின் ஒரு மாத சம்பளம்.
அதற்கு பிறகு, இன்னும் சிறிது நாட்கள் கழித்து மைக்கேலின் அப்பா ஒரு பழைய ஜெர்கினை மைக்கேலிடம் கொடுத்து “உன்னால் இந்த ஜெர்கினை 200 டாலருக்கு விற்க முடியுமா?” என்று கேட்டார்.
இந்த முறை மைக்கேல் துளியும் தயங்கவில்லை. இதற்கு முன்னால் அடைந்த சின்ன சின்ன வெற்றிகள் அவனுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்திருந்தன.
’என்ன செய்தால் இந்த ஜெர்கினை 200 டாலருக்கு விற்கலாம்?’ என்று இரவும் பகலும் யோசித்துக் கொண்டே இருந்தான் மைக்கேல். ஆனால், ஒரு மாதமாக அவனுக்கு எந்தவொரு ஐடியாவும் தோன்றவில்லை.
இருந்த பொழுதும், அவன் யோசித்துக் கொண்டே இருந்தான். எந்த வேலை செய்யும் பொழுதும், சாப்பிடும் பொழுதும், குளிக்கும் பொழுதும், தூங்கும் பொழுதும் கூட அவனுக்கு இதே சிந்தனையாக இருந்தது.
இந்த சமயத்தில் தான் ”சார்லிஸ் ஏஞ்செல்ஸ்” படம் வெளியாகி அமெரிக்கா முழுவதும் சக்கைப் போடு போட்டது. அந்த படத்தில் நடித்திருந்த ஃபாரா ஃபெசிட் (Farrah Fawcett) அந்த படத்தின் வெற்றி விழாவிற்காக நியூயார்க் வந்திருந்தார்கள்.
அவர்களைப் பார்த்ததும் மைக்கேலுக்கும் மூளையில் மின்னல் வெட்டியது போன்று ஒரு ஐடியா தோன்றியது.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு முடிந்ததும் அங்கிருந்த பத்திரிக்கைக்காரர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரையும் தாண்டி ஃபாரா ஃபெசிட் முன்னால் சென்று, “மேடம்.. மேடம்.. நான் உங்களுடைய தீவிர ரசிகன்.. நீங்கள் எனக்காக இந்த ஜெர்கினில் ஒரே ஒரு ஆட்டோகிராஃப் போட்டுத் தர முடியுமா?” என்று கேட்டான்.
13 வயது சின்ன பையன் இத்தனைப் பேரைத் தாண்டி வந்து நம்மிடம் ஆட்டோகிராஃப் கேட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஃபாரா ஃபெசிட் அவனுக்கு அந்த ஜெர்கினில் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார்கள்.
அந்த ஆட்டோகிராப் வாங்கி வெளியே வந்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான். அங்கிருந்த அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்த்தார்கள். ஆனால், அதனைவிட ஆச்சரியமாக ஒரு விஷயம் செய்தான் மைக்கேல்.
“இது ஃபாரா ஃபெசிட் சில நிமிடங்களுக்கு முன்னால் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்த ஜெர்கின். இந்த ஜெர்கின் யாருக்கு வேண்டுமோ அவர்கள் ஏலம் கேட்கலாம்.. இதன் ஆரம்பவிலை 200 டாலர்” என்று அந்த கூட்டத்தின் முன்னால் கர்ஜிக்க ஆரம்பித்தான் மைக்கேல்.
அங்கிருந்த ஃபாரா-வின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு அந்த ஜெர்கினை ஏலத்தில் எடுத்தார்கள்..
300 டாலர்..
400 டாலர்..
500 டாலர்...
என்று ஏலம் தொடர்ந்து நடந்தது.,
இறுதியாக 1200 டாலருக்கு அந்த ஜெர்கினை ஃபாரா-வின் ரசிகர் ஒருவர் ஏலத்தில் எடுத்தார்.
மைக்கேல் அவன் அப்பா சொல்லிய விலை 200 டாலரை விட ஆறு மடங்கு அதிகமாக 1200 டாலருக்கு அந்த ஜெர்கினை விற்றுக் காண்பித்தான்.
“உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது மைக்கேல்” என்று நெகிழ்ந்துப் போனார் மைக்கேலின் அப்பா.
“இதிலிருந்து நீ என்ன பாடத்தைக் கற்றுக் கொண்டாய்?” என்று கேட்டார் மைக்கேலின் அப்பா.
”முதலில் நான் என் மேலேயே நம்பிக்கை இல்லாமல் என்னால் முடியாது என்று நினைத்தேன்.
பிறகு அதிக முயற்சியும், கடின உழைப்பும், கொஞ்சம் தன்னம்பிக்கையும் இருந்தால் இலக்கை அடைய முடியும் என்று புரிந்துக் கொண்டேன்.
பிறகு கொஞ்சம் முயற்சி, அதிக தன்னம்பிக்கை, சிறிது வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய திறனும் நம்மிடம் இருந்தால் இந்த உலகையே என்னால் அடைய முடியும் என்று நான் புரிந்துக் கொண்டேன். “
என்று சொன்னான் மைக்கேல்.
“சரிதான் மைக்கேல். அதைவிட முக்கியமானது என்னவென்றால், ஒரு சாதாரண பழைய துணியையே மதிப்புக் கூட்டி இவ்வளவு பணத்திற்கு விற்க முடியுமென்றால், ஒரு உயிருள்ள சிந்திக்கக்கூடிய மனிதனுடைய மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று யோசித்துப் பார்த்தியா..? நாம் கருப்பினம். நாம் ஏழை என்ற தாழ்வு மனப்பான்மை மட்டும் உனக்கு என்றைக்குமே இருக்கக்கூடாது. நாம் கருப்பாக இருக்கலாம். ஆனால், நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் தூய்மையாகவும், உயர்வாகவும் இருந்தால் நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை” என்று மைக்கேலின் அப்பா சொன்னார்.
இந்த மைக்கேல் தான் பின்னாளில் மிகப்பெரிய கூடைப்பந்து விளையாட்டு வீரர் ”மைக்கேல் ஜோர்டான்” - ஆக உலகம் முழுவதும் பல வருடம் வலம் வந்தார்.
அது மட்டுமல்ல, அவர் ஆட்டோகிராஃப் போட்ட ஒரு டீ-ஷர்ட் 10,000 டாலருக்கும் அதிகமாக விலைப் போனது என்றால் அவருடைய எண்ணங்கள் எவ்வளவு உயர்வாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
அவருக்கு கடின உழைப்பையும், வித்தியாசமாக சிந்திக்ககூடிய பழக்கத்தையும் ஏற்படுத்தியது, சிறு வயதில் அவர் அப்பா விற்க சொன்ன பழைய துணிகள் தான் என்கிறார் மைக்கேல் ஜோர்டன்.
நீங்களும் உங்களுடைய வித்தியாசமாக யோசிக்கக் கூடிய திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். நாளை நீங்கள் ஆட்டோகிராஃப் போட்ட டீ ஷர்ட் பல மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்படலாம்..
All the best.



0 comments:
Post a Comment