சென்னையில் இரண்டு பக்கமும் வீடுகளால் சூழப்பட்ட ஒரு பெரிய தெரு இருந்தது. அதே தெருவில் ஒரு காலி மனையும் இருந்தது. வழக்கம்போல் அந்த பகுதியில் இருந்த குடிமக்கள் தங்கள் வீட்டு குப்பைகளை அங்கு கொட்டி வைத்திருந்தார்கள். அதே தெருவில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனும் இருந்தான் அவன் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவனை அந்த தெருவில் இருந்த அனைவரும் நம்மாழ்வார் என்று தான் அழைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஏனென்றால், அந்த பையன் அனைவரிடமும் தண்ணீரை சிக்கனமாக செலவழியுங்கள்.
உங்கள் வீட்டு RO-வில் ஏசியில் வெளியேறுகிற நீரை மறுசுழற்சி முறையில்
பயன்படுத்துங்கள். எல்லார் வீட்டிலும் மழைநீர் தோட்டி அமைத்து மழைநீரை சேமியுங்கள்
என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தான். அதனால் தான் அவனுக்கு அந்த பெயர்
வைத்திருந்தார்கள்.
அதேபோல் தான் அவன் அந்த தெருவில் இருந்த அனைவரிடமும் காலி இடத்தில்
குப்பைகளைக் கொட்டாதீர்கள் என்று சொல்வான். ஆனால், அவன் எவ்வளவு சொல்லியும் யாரும்
அதனை கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் அந்த காலி இடத்தில் குப்பைகளைக் கொட்டிக்
கொண்டே தான் இருந்தார்கள். கேட்டால் ”சனிக்கிழமை ஒருநாள் தான் நம்முடைய தெருவுக்கு
குப்பை வண்டி வருகிறது. அதுவரை இந்த குப்பைகளை என்ன செய்வது” என்று கூறி
குப்பைகளைக் கொட்டிக் கொண்டேதான் இருந்தார்கள்.
இதனால் அந்த இளைஞன் அந்த ஏரியா கவுன்சிலரிடமும், கார்ப்பரேஷன் ஆஃபீஸிலும்
பேசி வாரத்திற்கு ஒரு நாள் வந்துக் கொண்டிருந்த குப்பை வண்டியை வாரத்திற்கு இரண்டு
நாள் வர வைத்தான்.
இதற்கு பிறகாவது மக்கள் அந்த காலி இடத்தில் குப்பைகளை கொட்டாமல்
இருப்பார்கள் என்று பார்த்தால் அப்பொழுதும் குப்பைகளைக் கொட்டிக் கொண்டே தான்
இருந்தார்கள்.
இந்த மக்களுக்கு எவ்வளவு சொல்லியும் திருத்த முடியவில்லையே என்று
யோசித்திக் கொண்டிருந்தபொழுது தான் அந்த தெருவில் நிறைய 10 முதல் 16 வயதுவரை உள்ள
குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
உடனே இந்த நம்மாழ்வார் அந்த குப்பைகளைப் பார்த்தார். அந்த குழந்தைகளைப்
பார்த்தார். திரும்பி அந்த குழந்தைகளைப் பார்த்ததும் ஒரு வித்தியாசமான எண்ணம்
அவருடைய மனதில் உதித்தது.
அவர் அந்த குழந்தைகளை அழைத்து ”உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு
வீடு இருக்கிறது. அதேபோல் உங்கள் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக ஒரு நாடு
இருக்கிறது. நீங்கள் தான் அந்த நாட்டிற்கே ராஜா. அப்படி இருந்தால் எப்படி
இருக்கும்?” என்று கேட்டார்.
”எங்க ஒவ்வொருத்தருக்கும் தனி நாடு. அந்த நாட்டிற்கு நாங்கள் தான் ராஜாவா?”
என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள் குழந்தைகள்.
ஆமாம். நீங்கள் ஒவ்வொருத்தரும் ஒரு நாட்டின் ராஜா. அதுமட்டுமல்லாது உங்கள்
ஒவ்வொருத்தருக்கும் வாரத்திற்கு 200 ரூபாய் பாக்கெட் மணி. இது எல்லாம் உங்களுக்கு
கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் அனைவரும் ஞாயிற்றுக் கிழமைக் காலை 6.30 மணிக்கு
இந்த இடத்திற்கு வரவேண்டும்..” என்று அழைத்தார்.
சரி என்று சொல்லிவிட்டு ஞாயிற்றுக் கிழமைக் காலையில் 6.30 மணிக்கு அந்த குப்பையைக் கொட்டி வைத்திருந்த அந்த காலி இடத்திற்கு குழந்தைகள் வந்தார்கள்.
வந்துப் பார்த்தால் அவர்களுக்கு பேரதிர்ச்சிக் காத்திருந்தது.
அது என்னவென்றால், நம்மாழ்வார் அந்த இடத்தை சுத்தமாக க்ளீன் செய்து
வைத்திருந்தார்.
அது மட்டுமல்லாது, அவர் அந்த காலி இடத்தை ஆறாகப் பிரித்து பகிர்ந்து
வைத்திருந்தார்.
பிறகு அந்த ஆறு இடத்திற்கும்
- குறிஞ்சி தேசம்,
- முல்லைதேசம்
- மருத தேசம்
- நெய்தல் தேசம்
- பாலை தேசம்
- சோழ தேசம்
என்று சிறிய அட்டைகளில் பெயரெழுதி அந்த இடங்களில்
நட்டு வைத்திருந்தார்.
நம்முடைய தெருவில் பெரிய குழந்தைகளாக இருக்கிற ஆறு
பேர் இந்த ஆறு தேசத்திற்கும் ராஜா. அவர்களுக்கு கீழே மற்ற குழந்தைகள் இருக்க
வேண்டும். சுழற்சி முறையில் இது மாறிக் கொண்டே இருக்கும். சம்மதமா? என்று
கேட்டார். எல்லாரும் “ஓகே” என்று சொன்னார்கள்.
”அது சரி. நாம் இந்த இடத்தில் என்ன செய்யப் போகிறோம்?” என்று அந்த
குழந்தைகள் கேட்டார்கள்.
உடனே, சாக்கில் மூடி வைத்திருந்த இன்னொரு இடத்தைக் காட்டினார். ”அந்த
சாக்கைத் திறந்துப் பாருங்கள்..” என்று கூறினார்.
எல்லா குழந்தைகளும் ஆர்வத்தோடு சென்று அதனைத் திறந்துப் பார்த்தார்கள்.
அந்த சாக்குப் பையில் மாடித் தோட்டத்தில் வைப்பது போன்று சில பாக்கெட்கள் மண்களால்
நிரப்பப்பட்டு இருந்தது.
ஒவ்வொரு தேசத்திற்கும் ஆறு பாக்கெட்கள்.
இந்த பாக்கெட் மணலில் தக்காளி, வெண்டைக்காய், பச்சை மிளகாய், முள்ளங்கி,
கத்திரிக்காய், கீரை வகைகள் என்று சில விதைகளைப் போடலாம். உங்கள் தேசத்தில் என்ன
விதைப் போட போகிறோம் என்பதையும், எதனை விளைய வைக்க போகிறோம் என்பதையும் அந்த
நாட்டு அரசர்கள் தான் திர்மானிக்க வேண்டும்.
நீங்கள் இந்த பாக்கெட்களை பத்திரமாக பாதுகாத்தால் இன்னும் சில வாரங்களிலேயே
இந்த காய்கறிகள் மூலமாக நீங்கள் சம்பாதிக்க முடியும். இந்த இடத்தையும் சுத்தமாக
வைத்துக் கொள்ள முடியும். இது உங்களுடைய தேசம். நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும்
என்று நம்மாழ்வார் கூறினார்.
ஆரம்பத்தில் சில தேசத்துக் குழந்தைகள் மட்டும் தினமும் ஆர்வத்துடன் வந்து
பாதுகாத்து தண்ணீர் ஊற்றி, அந்த செடிகளை வளர்த்தார்கள். நம்மாழ்வாரும் அவர்களுக்கு
நிறைய உதவி செய்தார். சில வராத குழந்தைகளின் தேசத்தையும் அவரே பாதுகாத்தார்.
சில வாரங்களிலேயே அந்த இடத்தில் இருந்து தக்காளியும் வெண்டைக்காயும்
காய்க்க ஆரம்பித்தது. குழந்தைகள் அந்த தெருவிற்கு என்று வாட்ஸ்அப் க்ரூப் ஒன்று
ஆரம்பித்து அந்த காய்கறிகளை விற்க ஆரம்பித்தார்கள்.
சுத்தமான காய்கறிகள் என்பதால் ஏகப்பட்ட தேவை இருந்தது அந்த காய்கறிகளுக்கு.
ஒரு தேசத்தில் விளைந்த விளைச்சலைப் பார்த்ததும் மற்ற தேசத்து குழந்தைகளும் இன்னும்
உற்சாகம் ஆனார்கள். காய்கறிகள் விற்ற பணம் மூலமாக அந்த குழந்ததைகள் இன்னும் சில
பாக்கெட்களை வாங்கினார்கள்.
மேலும், ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய பிறந்த நாளுக்கு பரிசுகள் என்று
கேட்காமல் இது போன்ற மாடித் தோட்ட பாக்கெட்களை வாங்கித் தர சொன்னார்கள். அந்த காலி
இடம் மட்டுமல்லாது அந்தந்த தேசத்து குழந்தைகள் வீட்டுடைய கார் பார்க்கிங்கில்
இருக்கும் இடம் வீட்டுப் பால்கனி என்று நிறைய இடங்களில் காயகறி செடிகள் அமைத்து
இன்னும் விளைச்சலை அதிகம் ஆக்கினார்கள்.
அந்த விளைச்சல் காய்கறிகளை வாட்ஸ்அப்பில் விற்கத் தொடங்கி, இன்று அந்த
தெருவிற்கே காய்கறி விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்.
வீட்டில் கூட வேலைப் பார்க்காத குழந்தைகள் தங்களுக்கு என்று ஒரு வருமானம்
வந்ததும் தங்களுடைய தேசத்திற்காக வேலைப் பார்த்தார்கள். வந்த வருமானத்தையும் அந்த
குழந்தைகள் சரியாக பயன்படுத்தினார்கள்.
அந்த ஏரியா நம்மாழ்வாரின் பெரும் முயற்சியால் ஆரோக்கியமான காய்கறி வளர்ப்பு
முறை, பொறுப்புணர்வு, நிதி நிர்வாகம் என்று அந்த குழந்தைகள் நிறைய விஷயங்களைக்
கற்றுக் கொண்டார்கள்.
பின்னாளில் அந்த தெருவின் ஒவ்வொரு குழந்தையும் ஒரு தலைவனாக உருவெடுக்கப்
போகிறார்கள். ஒவ்வொருத்தரும் இன்னொரு நம்மாழ்வாராக மாறுவார்கள் என்பதில் சந்தேகமே
இல்லை.
பார்த்தீர்களா?
இந்த இடத்தை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்று சிறிது மாற்றி
யோசித்ததால் இன்று ஒரு தெருவே ஆரோக்கியமாக மற்ற தெருக்களுக்கு முன்மாதிரியாக
இருக்கிறது.
பெரிய பெரிய நிறுவங்கள், ஒரு நாட்டினுடைய தலைவர்கள் மட்டும் தான் வித்தியாசமாக யோசிக்க வேண்டும் என்பதில்லை. இதுபோல் ஒவ்வொரு தனிமனிதனும் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். ‘இந்த மாதம் பட்ஜெட்டில் எப்படி ஆயிரம் ரூபாயை சேமிப்பது… பிறந்த நாளை எப்படி வித்தியாசமாக கொண்டாடுவது…’ என்று ஒவ்வொன்றிலும் வித்தியாசமாக யோசியுங்கள். உங்கள் சுயநலத்தில் சிறிது பொதுநலமும் கலந்திருந்தால் உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
All the best…!



0 comments:
Post a Comment