பங்குச்சந்தையில் மிகப்பெரிய அளவில் சம்பாதித்தவர் யாரென்று யாரிடம் கேட்டாலும் “வாரன் பஃபெட் (Warren Buffett)” என்று சரியாக சொல்லிவிடுவார்கள்..
ஆனால், வாரன் பஃபெட் செய்தது சரியான மற்றும் நீண்டகால முதலீடு (Investment). வளர்ந்து வரக்கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்தார். அவர் கணித்தது போலவே அந்த நிறுவனங்களும் வளர்ந்து வாரன் பஃபெட் அவர்களுக்கு இலாபத்தைக் கொடுத்தது.
ஆனால், ”வாரன் பஃபெட்-க்கு பிறகு யார்?” என்று கேட்டால், யாருக்குமே தெரியாது... வாரன் பஃபெட்-க்கு நிகராக அல்லது வாரன் பஃபெட்டைவிட பங்குச்சந்தை மற்றும் வர்த்தகத்தில் ஒருத்தர் புகுந்து விளையாடினார் என்றால், அது ஜார்ஜ் சோரஸ் தான்.
ஜார்ஜ் சோரஸ் - இவருக்கு இன்னொரு பெயர் இருக்கு.
"The Man who broke the Bank of England" என்று இன்னொரு பெயர் இவருக்கு உண்டு.
அதாவது, "Bank of England-ஐ தகர்த்தவன்" என்று ஒரு பெயர் இவருக்கு இருக்கிறது.
ஆம், உலகையே ஆட்டிப் படைத்த ஒரு குட்டித் தீவுதான் இங்கிலாந்து. ஆனால், அந்த இங்கிலாந்தையே ஆட்டம் காண வைத்தர் தான் இந்த ஜார்ஜ் சோரஸ்.
அவர் கொஞ்சம் மாத்தியோசித்ததால், ஒரே இரவில் 4500 கோடி ரூபாய் பணம் அவர் சம்பாதித்தார். அவர் எப்படி சம்பாதித்தார் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
===================================================
1990 காலக்கட்டத்தில் இங்கிலாந்தின் பொருளாதாரம் மந்த நிலையை எட்டியிருந்தது. இங்கிலாந்து கரன்சியான பவுண்ட்டின் விலை அந்த காலக்கட்டத்தில் தான் சரியத் தொடங்கியது. இருந்தபோதிலும், இங்கிலாந்து அரசாங்கம் பவுண்ட் விலையை சரியவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.
அதாவது ஒரு எடுத்துக்காட்டுக்கு சொல்கிறேன்.
அந்த சமயம் ஒரு பவுண்டின் விலை 100 ரூபாய் என்று இங்கிலாந்து அரசாங்கம் நிர்ணயிருந்தார்கள் என்றால், அதன் உண்மையான விலை 90 ரூபாயாகத் தான் இருந்தது. ஒரு வீம்புக்காக இங்கிலாந்து அரசாங்கம் அதனை சரியவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.
”இந்த நிலை ரொம்ப நாள் நீடிக்காது. பவுண்ட் விலை மேலும் குறையும்” என்று அப்பொழுதே மிகச் சரியாக கணித்தார் ஜார்ஜ் சோரஸ்.
அதனால் அவர் என்ன செய்தார் தெரியுமா?
இங்கிலாந்து நாட்டில் இருந்த அத்தனை வங்கிகளிலும் மிகப்பெரிய தொகையை கடனாக வாங்கினார். ஜார்ஜ் சோரஸ் ஒரு மிகப்பெரிய முதலீட்டாளர் என்பதால் அனைத்து வங்கிகளும் அவருக்கு கடன் தர தயாராக இருந்தன.
அவர் கடனாக வாங்கிய இங்கிலாந்து கரன்சி பவுண்ட் அத்தனையையும் உடனடியாக ஜெர்மன் கரன்சியான மார்க் - காக மாற்றி வைத்துக் கொண்டார். அதுமட்டுமல்லாது பல நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கிக் குவித்தார் சோரஸ்.
அவர் எதிர்பார்த்தது போலவே, 1992ஆம் ஆண்டு இங்கிலாந்து பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. பவுண்ட் - டின் மதிப்பு பயங்கரமாக குறைந்தது. ஒரே நாளில் மிகப்பெரிய வீழ்ச்சி. இதனை சாதகமாக பயன்படுத்தி அவர் வாங்கிய மொத்த கடனையும் அடைத்துவிட்டார்.
அதாவது, ஒரு எடுத்துக்காட்டுக்கு சொல்கிறேன்.
அவர் கடன் வாங்கும்பொழுது ஒரு பவுண்டின் மதிப்பு 100 ரூபாய் இருந்தது என்றால், வீழ்ச்சிக்குப் பிறகு 70 ரூபாயாக குறைந்து இருந்தது.
அதனால் அவர் கடனாக திருப்பி அளித்த ஒரு பவுண்டின் மதிப்பு 70 ரூபாயாகத்தான் இருக்கும். ஆனால், அவர் அதனை ஜெர்மன் கரன்சி மார்க்காக மாற்றி வைத்திருந்ததால், அவருக்கு ஒரு பவுண்டிற்கு 30 ரூபாய் இலாபமாக கிடைத்திருக்கும் அல்லவா...
இதனால், அவருக்கு இலாபமாக கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?
1 பில்லியன் அமெரிக்க டாலர்.
அப்பொழுது இருந்த இந்திய மதிப்பிற்கு கிட்டத்தட்ட 4500 கோடி ரூபாய்.
அவர் 4500 கோடி ரூபாய் சம்பாதித்த நாள் செப்டம்பர் 16, 1992.
அந்த நாளைதான் இங்கிலாந்து அரசாங்கம் "Black Wednesday" என்று அறிவித்தார்கள்.
நான் உங்களுக்கு புரிய வேண்டும் என்று தான் Black Wednesday எனும் Concept-ஐ ERM, Bank Interest Rate எனும் Technical terms இல்லாமல் மிகவும் எளிமையாக விளக்கியிருக்கிறேன்.
அதேபோல், மேலோட்டமாக பார்த்தால், ஒரே இரவில் அவர் இவ்வளவு பணத்தை சம்பாதித்தார் என்பது போல தான் தெரியும். அது உண்மைதான். ஆனால், அவருடைய பின்புலத்தைப் பற்றி ஆராய்ந்தால் தான், அவர் எப்படி சம்பாதித்தார் என்பது நமக்கு புரியும்.
ஜார்ஜ் சோரஸ் ஹங்கேரி நாட்டைச் சார்ந்தவர். தன்னுடைய இளமைக் காலத்தில் இரண்டாம் உலகப்போரால் பாதிக்கப்பட்டவர்.
ஒரு வழியாக அங்கிருந்து தப்பி இங்கிலாந்து வந்து 1947 ஆம் ஆண்டு London School of Economics and Political Science எனும் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார். தன்னுடைய படிப்பு செலவுக்காக இரயில்வே ஸ்டேஷனில் பெட்டித் தூக்கும் வேலைப் பார்த்தார்.
அதன்பிறகு 1951 ஆம் ஆண்டு Bachelor of Science, Philosophy பட்டப்பிரிவில் சேர்ந்து படிக்கிறார்.
1954 ஆம் ஆண்டு Master of Science, Philosophy முடிக்கிறார். அதன்பிறகும் பெரிதாக வேலைக் கிடைக்கவில்லை. அதனால், Salesman ஆக ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்க்கிறார்.
1956 ஆம் ஆண்டு தான் வங்கியில் கிளார்க் வேலை கிடைக்கிறது. கிட்டத்தட்ட தன் துறை சார்ந்த வேலையில் அப்பொழுது தான் சேர்கிறார். அங்கு அந்த வங்கியில் படிப்படியாக முன்னேறுகிறார்.
அதன் பிறகு அமெரிக்கா சென்று 13 வருடங்கள் Arbitrage Trader-ஆக வேலைப் பார்க்கிறார்.
அதன்பிறகு வெளியே வந்து Quantum Funds எனும் நிறுவனத்தைத் தொடங்குகிறார்.
இதன்பிறகு தான் நான் மேலே சொன்ன பொருளாதார வீழ்ச்சி நடக்கிறது. இதன்மூலம் 4500 கோடி ரூபாய் இலாபம் பார்க்கிறார் ஜார்ஜ் சோரஸ். Black Wednesday என்று அந்த நாளும் அறிவிக்கப்பட்டது. இது நடந்தது 1992 ஆம் ஆண்டு.
1956 ஆம் ஆண்டு அவர் துறையில் நுழைந்தார் என்று வைத்துக் கொண்டாலும், கிட்டத்தட்ட 36 ஆண்டு காலம் ஜார்ஜ் சோரஸ் இந்த துறையிலேயே ஊறியிருந்ததால் தான் மார்க்கெட்டை அவரால் சரியாக கணிக்க முடிந்தது.
நான் எதற்காக அவர் பின்புலத்தை சொல்கிறேன் என்றால், மேலோட்டமான கதையை மட்டும் கேட்டுவிட்டு ’நாமும் Currency trading, Forex trading, Arbitrage trading போன்றவற்றில் முதலீடு செய்தால் ஒரே நாளில் இவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்’ என்று நீங்கள் நினைக்கக்கூடாது.
அவரைப்போன்று உங்களையும் வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டுவதற்கான பதிவாகத்தான் இது இருக்கவேண்டுமே தவிர, உங்களின் பணத்தாசையை தூண்டும் சம்பவமாக இது இருக்கக்கூடாது.
அப்படி என்றால், ’பங்குச்சந்தை, மூதலீடு போன்றவற்றில் என்னால் சம்பாதிக்க முடியாதா?” என்று நீங்கள் கேட்டால், “கண்டிப்பாக, தாராளமாக சம்பாதிக்கலாம்” என்பது தான் என் பதிலாக இருக்கும்.
காரணம், வாரன் பஃப்ட்-டும் சரி, ஜார்ஜ் சோரஸும் சரி, தன்மேல் தான் நம்பிக்கை வைத்து முதலீடு செய்கிறார்கள். அதனால், நீங்களும் Share Market, Trading போன்றவற்றில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறிய அளவில் முதலீடு செய்து நீங்களே கற்றுக் கொள்ளுங்கள். சிறிது முயற்சி செய்தால் நீங்களே இதனை எல்லாம் சாதாரணமாக கற்றுக் கொள்ளலாம். யாரையும் நம்பி இதில் இறங்காதீர்கள். யாரும் உங்களை தவறாக வழிநடத்தி விடக்கூடாது என்பதற்காக தான் இதனை சொல்கிறேன்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு”
நீங்களே உங்கள் அறிவை வளர்த்துக் கொண்டால், உங்கள் எண்ணங்கள் உயர்வாகும் போது, உங்கள் உள்ளுணர்வும் உங்களை மாற்றி யோசிக்கத் தூண்டும்.
அதனால், உங்கள் அறிவை வளர்த்துக் கொண்டு, உங்களை எப்பொழுதும் தயாராக வளர்த்துக் கொள்ளுங்கள். வாய்ப்பு வரும் பொழுது அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
All the best 

0 comments:
Post a Comment