Friday, July 10, 2020

சுனில் மிட்டல் (Sunil Mittal)

    ந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் அசைக்க முடியாத சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் நிறுவனம் தான் ஏர்டெல் (Airtel) நிறுவனம். இந்த ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் அவர்கள் மாத்தி யோசித்து வெற்றிப் பெற்ற கதையை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.



சுனில் மிட்டல் அவர்கள் 1980 காலக்கட்டங்களில் சைக்கிள் உதிரிபாகங்கள் தயாரிப்பது, ஜெனரேட்டர் விற்பனை என்று பல தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இருந்தாலும், அடுத்து என்ன செய்யலாம், அடுத்து எப்படி முன்னேறலாம் என்று ஒவ்வொரு நொடியும் யோசித்துக் கொண்டே இருந்தார். 

அந்த மாதிரி சமயத்தில் தான், ஒரு முறை தைவானில் நடந்த வர்த்தக கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக சுனில் மிட்டல் தைவான் சென்றிருந்தார். அந்த கண்காட்சியில் ஏகப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் அதன் விலையெல்லாம் அதிகமாக இருந்தது. ’இந்த பொருட்கள் எல்லாம் இந்தியா போன்ற நாட்டில் விற்பனையாகாது. அதனால், நடுத்தர மக்கள் பயன்படுத்துவது போன்று ஒரு பொருளை விற்பனை செய்தால் தான் வெற்றிபெற முடியும்’ என்று நினைத்தார் சுனில்.

அப்படி அவர் தேடிக்கொண்டிருந்த
பொழுது,  அவர் பார்வையில் பட்டது தான் Landline Push Button Phone-கள்.
 
Landline Push Button Phones


1980 காலக்கட்டத்தில் இந்தியாவில் Rotary Dial Phone கள் மட்டும் தான் வழக்கத்தில் இருந்தது.

Rotary Dial Phone

இந்த Rotary Dial Phone களில் என்ன பிரச்சனை என்றால், ஒவ்வொரு எண்ணிற்கு மேலும் ஒரு வட்டத்துளை இருக்கும். நீங்கள் ஒரு எண்ணிற்கு தொடர்புகொள்ள வேண்டுமென்றால், ஒவ்வொரு எண்ணாக அந்த வட்டத்துளையில் விரல் வைத்து முழுவதுமாக வட்டமாக சுற்றி விட்டு, சுற்றி விட்டு தான் Dial செய்ய வேண்டும். அதனைவிட, அந்த Rotary Phone-ல் இருக்கும் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், அதில் Redial Button போன்ற வசதிகள் எல்லாம் இருக்காது. நீங்கள் Redial செய்ய வேண்டுமென்றால் மறுபடியும் முதலிலிருந்து சுற்றி விட்டு, சுற்றி விட்டு பேசுவதற்குள் கடுப்பாகி விடும்.

இந்த சமயத்தில் தான் சுனில் மிட்டல் அவர்கள் தைவான் கண்காட்சியில் Push Button போன்களை பார்க்கிறார். அது மட்டுமல்லாது, அந்த போனின் விலையும் அதிகமாக இல்லை. மேலும், அனைத்து எண்களையும் எளிமையாக டயல் செய்யும் வசதி இருந்தது. Redial Option இருந்தது. ஒரு சில எண்களை Save செய்து வைக்கும் வசதியும் அந்த போனில் இருந்தது. மேலும், அந்த Rotary Phone போன்று பானை அளவுக்கு பெரியதாக இல்லாமல் சிறியதாக அழகாக இருந்தது. 

அந்த போனை பார்த்த உடனே, ’இந்த போன்கள் இந்தியாவில் பெரிதளவில் விற்பனையாகும். இந்த போன்கள் பெரியளவில் வெற்றி பெறும்’ என்று அவருக்குத் தோன்றியது. 

உடனே சுனில் மிட்டல், Kingtel என்ற தைவான் நிறுவன அதிகாரிகளோடு பேசினார். இந்த போன்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த கண்காட்சி ஒரு வர்த்தக கண்காட்சி என்பதால், பேச்சுவார்த்தை எல்லாமே அந்த கண்காட்சியிலேயே பேசி ஒரு தொகையைக் கொடுத்து சுனில் மிட்டல் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு விட்டார். 

இவ்வளவு வேகமாக எல்லா வேலைகளும் முடிந்ததில் சுனில் மிட்டல் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.  அந்த பானை அளவிலான போன்களுக்கு பதிலாக, இந்த சிறிய அழகான Push Button போன்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்யப் போகிறோம் என்று படு மகிழ்ச்சியாக இந்தியா திரும்பியவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. 

அது என்னவென்றால், ’அயல்நாட்டிலிருந்து ஒரு சில பொருட்களை தான் இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியும், ஒரு சில பொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது’ என்ற சட்டம் இந்தியாவில் அப்பொழுது இருந்தது. அப்படி இறக்குமதி செய்யக் கூடிய பொருட்களின் பட்டியலில் இந்த Push Button போன்கள் இல்லை. 

ஒப்பந்தம் எல்லாம் கையெழுத்திட்டு இந்தியா திரும்பிய பிறகு தான், அவருக்கு இந்த சட்டம் பற்றி தெரியவந்தது. அதனால் மிகவும் மனமுடைந்துப் போனார் சுனில் மிட்டல். அதனால், ’அதிகாரிகளிடம் பேசி இந்த வித்தியாசமான போன்களை பற்றி சொல்லி இறக்குமதி செய்வதற்கான அனுமதி வாங்கலாம்’ ஆனால், அப்படி சுனில் மிட்டல் அனுமதி வாங்கினால் பல நிறுவனங்களும் இதே போன்று போன்களை இறக்குமதி செய்து போட்டிக்கு வந்துவிடுவார்கள். அதனால், போட்டியும் அதிகமாகும். 

என்ன செய்யலாம் என்று யோசித்தார். இந்த இடத்தில் தான் சிறிது வித்தியாசமாக யோசித்தார் சுனில் மிட்டல். 

மொத்தமாக Landline போனாக தானே இறக்குமதி செய்யக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. அந்த போனின் உதிரிபாகங்களை மட்டும் தனித்தனியாக பிரித்து இறக்குமதி செய்து இந்தியாவில் Assemble செய்து விற்பதைப் பற்றி சட்டத்தில் எதுவும் குறிப்பிடவில்லையே என்று யோசித்தார்.

அதாவது ஒரு காரை தான் அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடாது. ஆனால், காரின் உதிரிபாகங்களை மட்டும் தனித்தனியாகப் பிரித்து இறக்குமதி செய்துக் கொள்ளலாம். அது போன்று Spare Parts மட்டும் இறக்குமதி செய்ய இந்திய சட்டத்தில் அனுமதி இருந்தது. இது போதுமே?

உடனே Kingtel நிறுவனத்தைத் தொடர்புக் கொண்டார் சுனில். 

“எத்தனை போன்களை அனுப்பி வைக்க வேண்டும்?” என்று அந்த நிறுவன அதிகாரிகள் கேட்டார்கள். 

“எவ்வளவு போன்களை வேண்டுமானாலும் அனுப்பி வையுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை. மொத்தமாக Landline போனாக அனுப்பி வைக்க வேண்டாம்.
அந்த போனை மூன்று பாகமாக பிரியுங்கள்,
Receiver தனியாக ஒரு பார்சல். 
Dialer (Transmitter) தனியாக ஒரு பார்சல். 
Ringer தனியாக ஒரு பார்சல். 
ஒரு பார்சலை டெல்லிக்கும், இன்னொரு பார்சலை மும்பைக்கும், மற்றொரு பார்சலை பஞ்சாப்புக்கும் அனுப்பி வைத்துவிடுங்கள்” என்று கூறினார்.

தைவான் அதிகாரிகள் குழம்பிப் போய் இருந்தாலும், அவர் சொன்னது போலவே மூன்று பாகங்களாகப் பிரித்து அனுப்பி வைத்தார்கள். 

அந்த உதிரிபாகங்கள் எல்லாம் பஞ்சாப்பில் இருக்கக்கூடிய அவரது தொழிற்சாலையில் Assemble செய்யப்பட்டு மிட்ப்ரோ (Mitbrau) என்ற பெயரில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. 

சிறியதாக, அழகாக, புதுப்புது வசதிகளுடன் விற்பனைக்கு வந்த Button Landline போன்கள் இந்தியாவில் ஒரு புரட்சியே செய்தது.  மக்கள் அனைவரும் பயங்கர ஆரவாரத்தோடு போட்டிப்போட்டுக் கொண்டு இந்த மொபைல் போன்களை வாங்கத் தொடங்கினார்கள். சுனில் மிட்டல் அவர்களுக்கும் பயங்கர இலாபம். 

பார்த்தீர்களா? இறக்குமதி செய்ய அனுமதி இல்லையென்று தெரிந்ததும், அவர் சோர்ந்து போகவில்லை. எப்படி இறக்குமதி செய்யலாம் என்று வித்தியாசமாக சிந்தித்தார். 

இதன்பிறகு அவரைப் போலவே நிறைய பேர் Button Landline Phone களை இறக்குமதி செய்ய நினைத்து அனுமதி வாங்க முடியாமல் திரும்பிப் போனார்கள். அதன் பிறகு தான் இந்தியாவிலேயே Button Phone களை நேரடியாக இறக்குமதி செய்ய சுனில் மிட்டல் அவர்களோடு சேர்த்து 52 பேருக்கு அனுமதி வழங்கியது இந்திய அரசாங்கம். 

பிறகு சுனில் மிட்டல் BTL (Bharti Telecom Limited) என்று இந்திய Landline போன்களை உருவாக்கி அதன்பிறகு தான் ஏர்டெல் (Airtel) என்ற பிரம்மாண்ட சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.

நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா? நாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களும் Chinese Brand, Korean Brand, US Brand ஆக தான் இருக்கின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவில் தான் தன்னுடைய கடையை விரித்திருக்கின்றன. ஆனால், நாம் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க் (Mobile Network) அனைத்துமே இந்திய நிறுவனங்களின் நெட்வொர்க் தான். ’அதெப்படி? இந்த மொபைல் நெட்வொர்க் சந்தையை மட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள் விட்டு வைத்தன?’ என்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கு முக்கிய காரணம் சுனில் மிட்டல் என்ற ஒற்றை மனிதர் தான். 
இன்று ஏர்டெல் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 400 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். 
18க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏர்டெல் தன்னுடைய சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது.  
அது எல்லாவற்றையும் விட உலகின் மூன்றாவது மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமும் ஏர்டெல் தான். இது எல்லாவற்றிற்கும் ஆரம்பப் புள்ளிதான் நான் மேலே சொன்ன சம்பவம்.

நீங்களும் உங்கள் முன்னேற்றத்தில் திடீரென்று ஏதாவது ஒரு தடை ஏற்பட்டது என்றால், அப்படியே அந்த இடத்திலேயே தேங்கிவிடாமல், சுனில் மிட்டல் அவர்களைப் போல் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தியுங்கள். 
உங்களுக்கு, உங்கள் மேலும், உங்கள் தொழில் மேலும் உண்மையாகவே ஆர்வம் இருந்தால் உங்களுக்கும் இது போன்ற வித்தியாசமான சிந்தனைகள் தோன்றிக் கொண்டே இருக்கும். 

All the best 

1 comments: