Friday, August 14, 2020

சீப்பு விற்பனை

    ரு பெரிய தொழிலதிபருக்கு மூன்று மகன்கள் இருந்தார்களாம். இவர் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய மூன்று மகன்களுக்கும் சரி சமமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டார். ஆனால், தனக்குப் பிறகு தன்னுடைய நிறுவனத்தின் பொறுப்புகளை யாருக்கு கொடுப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. அதனால் தன்னுடைய மூன்று மகன்களையும் அழைத்து ஒரு கேள்வி கேட்டார். 

அது என்னவென்றால் ”இந்த உலகத்தில் எப்பொழுதுமே நிலைத்து நிற்கக் கூடிய தொழில் எது?” என்று அந்த தொழிலதிபர் தன்னுடைய மூன்று மகன்களிடமும் கேட்டார். 

’எப்பொழுதுமே நிலைத்து நிற்கக்கூடிய தொழிலா..!?’ என்று யோசித்துவிட்டு மூன்று மகன்களும் மூன்று வித்தியாசமான பதிலகளை சொன்னார்கள். ஆனால், அவர்கள் சொன்ன எந்த பதில்களிலும் அந்த தொழிலதிபருக்கு திருப்தி வரவில்லை. 

”சரி. இதற்கான விடையை நான் பிறகு சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு..

“இப்பொழுது உங்கள் மூன்று பேருக்கும் ஒரு போட்டி. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் நம் நிறுவனத்தை எடுத்து நடத்தலாம். மற்றவர்கள் வெற்றி பெறுகிறவருக்கு துணையாக இருக்க வேண்டும். சம்மதமா?” என்று கேட்டார்.

மூன்று பேரும் ஏக மனதாக சம்மதம் என்று சொன்னார்கள். 

“போட்டி என்னவென்றால் நான் உங்களிடம் தலை சீவக்கூடிய சீப்புகளைக் கொடுக்கிறேன். ஒன்று அல்ல.. இரண்டு அல்ல.. ஆயிரம் சீப்புகளைக் கொடுக்கப் போகிறேன். உங்களில் யார் அதிகமான சீப்புகளை விற்கிறீர்களோ அவர்கள் தான் அடுத்து என்னுடைய தொழிலை நடத்தப் போகிற அந்த வெற்றியாளர்.” என்றார் அந்த தொழிலதிபரான அப்பா..

முதல் மகன் வடக்கே இருக்கக்கூடிய A என்ற கிராமத்திற்கு சென்று சீப்புகளை விற்க வேண்டும். 
இரண்டாவது மகன் மலைப்பகுதியில் உள்ள B என்ற கிராமத்திற்கு சென்று சீப்புகளை விற்க வேண்டும். 
மூன்றாவது மகன் தெற்கே இருக்கக்கூடிய C என்ற கிராமத்திற்கு சென்று சீப்புகளை விற்க வேண்டும்.
என்று சொன்னார் அந்த தொழிலதிபர்.

அந்த தொழிலதிபர் சொன்னதுபோல் அந்தந்த கிராமங்களுக்கு சென்று திரும்பி வந்தார்கள். ’தன்னுடைய மகன்கள் எவ்வளவு சீப்பு விற்றார்கள்?. என்ன மாதிரியான அனுபவங்களைப் பெற்றார்கள்?’ என்று கேட்க அந்த தொழிலதிபர் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருந்தார்.

முதல் மகனிடம் கேட்டார். “நீ எவ்வளவு சீப்புகளை விற்றாய்?” என்று கேட்டார்.

முதல் மகன் சொன்னான், “நீங்கள் சொன்னது போல் வடக்குப் பகுதியில் இருந்த A என்ற கிராமத்திற்கு சென்றேன். சென்று பார்த்தால் அங்கு எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அது மொட்டைப் போட்ட புத்த பிச்சுக்கள் வாழக்கூடிய ஒரு கிராமம். இந்த மொட்டை போட்ட பிச்சுக்களிடம் எப்படி சீப்புகளை விற்பது என்று எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் அங்கு இருக்கக்கூடிய சில புத்த பிச்சுக்களிடம் இந்த சீப்பை தலை சீவுவதற்கு மட்டுமல்ல, முதுகு சொறிவதற்கு கூட பயன்படுத்தலாம் என்று சொல்லி அங்கு இருந்த பிச்சுகளிடம் மூன்று சீப்புகளை விற்றேன்.” என்று கூறினான்.



உடனே அந்த தொழிலதிபர் “சூப்பர்..!” என்று சொல்லிவிட்டு இரண்டாவது மகனிடம் “நீ எவ்வளவு சீப்புகளை விற்றாய்..?” என்று கேட்டார்.

இரண்டாவது மகன் சொன்னான், “நானும் நீங்கள் சொன்னது போல் மலைப்பகுதியில் உள்ள B என்ற கிராமத்திற்கு சென்றேன். அதுவும் மொட்டைப் போட்ட புத்த பிச்சுக்கள வாழக்கூடிய கிராமம் தான். முதலில் இவர்களிடம் சீப்புகளை எப்படி விற்பது என்று தயங்கினேன். பிறகு சிறிது வித்தியாசமாக யோசித்து அந்த புத்த மடாலயத்தில் உள்ள தலைவரிடம் பேசினேன். உங்களுக்கு வேண்டுமென்றால் சீப்பு தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால், இந்த மடாலயத்திற்கு வெளியூரிலிருந்து மலையேறி புத்தரை தரிசிக்க வரும் சாதாரண மக்களுக்கு புத்துணர்ச்சி பெறும்போது தலை சீவ இந்த சீப்பு தேவைப்படும் என்று சொன்னேன். அவரும் யோசித்துவிட்டு 10 சீப்புகளை வாங்கிக் கொண்டார்.” என்றான் இரண்டாவது மகன்.

(மக்கள் சீப்புகளை வைத்து தலை சீவி முடித்தவுடன் அந்த புத்த பிச்சுகளிடமே சீப்புகளைக் கொடுத்துவிடுவர். அதனால் 10 சீப்பு மட்டுமே மடாலயத்திற்கு தேவைப்பட்டது)

அதன்பிறகு மூன்றாவது மகனிடம் “நீ எவ்வளவு சீப்புகளை விற்றாய்?” என்று கேட்டதற்கு அவன் சொன்னான் “நான் ஆயிரம் சீப்புகளையும் விற்றுவிட்டேன்” என்று..

உடனே மற்ற இருவரும் அதிர்ச்சியுடன் “அது புத்த பிச்சுக்கள் வாழக்கூடிய கிராமம் கிடையாதா..?” என்று கேட்டார்கள்.

”தெற்கு பகுதியில் உள்ள C என்ற கிராமமும் மொட்டைப் போட்ட புத்த பிச்சுக்கள் வாழக்கூடிய கிராமம் தான். ஆனால், இருந்தாலும் அவர்களிடம் பேசி ஆயிரம் சீப்புகளை விற்றேன்” என்றான் மூன்றாவது மகன்

”ஆயிரம் சீப்புகளை நீ எப்படி விற்றாய்?” என்று ஆச்சரியத்துடன் அந்த தொழிலதிபர் கேட்டார். 

நான் முதலில் இந்த சீப்புகள் மொட்டைப் போட்ட புத்த பிச்சுக்களுக்கு தேவைப்படாது. அதனால், வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்குதான் தேவைப்படும் என்பதை புரிந்துக்கொண்டேன். இருந்தாலும் ஒரே நாளில் ஆயிரம் பக்தர்கள் வருவது என்பது சாத்தியம் கிடையாது. அதனால் முதலில் அந்த சீப்புகளில் புத்தரின் பொன்மொழிகளை சிறியதாக செதுக்கி வைத்துக் கொண்டேன்.



அதன் பிறகு புத்த மடாலயத்தின் தலைமை பிச்சுவிடம் சென்று பேசினேன். “நம்முடைய இந்த மடாலயத்திற்கு நிறைய பேர் நன்கொடை வழங்குகிறார்கள். அவர்களுக்காகவும், மடாலயத்திற்கு வரும் பகதர்கள் எப்பொழுதும் புத்த்ரை நினைப்பது போன்றும் ஒரு நினைவு பரிசு நீங்கள் தரலாமே” என்று கூறினேன்.

அவரும் உடனே, ”தாராளமாக தரலாமே. ஆனால் என்ன நினைவு பரிசு தரலாம்?” என்று அந்த தலைமை பிச்சு என்னிடம் கேட்டார். 

“புத்தரின் பொன்மொழிகள் பொறித்து வைக்கப்பட்டுள்ள ஒரு சீப்பை அவரிடம் காட்டினேன். இந்த சீப்பை ஒவ்வொரு முறை மக்கள் பயன்படுத்தும் பொழுதும், புத்தரும், புத்தரின் வாசகமும் அவர்கள் மனதில் இருக்கும் ” என்று சொன்னேன்.

அந்த சீப்புகளை ஆச்சரியத்துடன் வாங்கிப் பார்த்த அந்த தலைமை பிச்சு ”இதே போன்று ஆயிரம் சீப்புகள் வேண்டும்” என்று ஆர்டர் கொடுத்தார்.  இவ்வாறுதான் நான் ஆயிரம் சீப்புகளை விற்றேன் என்றான் மூன்றாவது மகன்.

“சபாஷ்..” என்று சொல்லிவிட்டு அந்த மூன்றாவது மகனைக் கட்டித் தழுவினார் அந்த தொழிலதிபர். 

(நாமும் முதல் மகன் போன்று யோசித்துவிட்டு, நாமும் வித்தியாசமாக சிந்திக்கிறோம் என்று நினைத்துக்  கொள்கிறோம். ஆனால், மாத்தி யோசிக்கும் திறன் அளவற்றது. அது மூன்றாவது மகன் யோசித்தது போன்று பிரம்மாணடமான வெற்றிகளை நமக்குப் பெற்றுத் தரும்)

Maathiyosi


மீண்டும் அந்த தொழிலதிபர் தன்னுடைய மகன்களைப் பார்த்துக் கேட்டார், “இந்த உலகத்தில் எப்பொழுதும் நிலைத்து நிறகக்கூடிய தொழில் எது?” என்றார்.

பிறகு அதற்கான விடையை அந்த தொழிலதிபரே கூறினார். 

“எத்தனைத் தொழில்கள் இந்த உலகத்தில் இருந்தாலும்,
எத்தனைக் கண்டுபிடிப்புகள் இந்த உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும் 
அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிற “Sales and Marketing" தொழில் தான் எப்பொழுதுமே நிலைத்து நிற்கும் என்று சொன்னாராம்.

அதனால் அதிகமான சிப்புகளை விற்பனை செய்த மூன்றாவது மகனிடம் தன்னுடைய அனைத்து நிறுவனத்தின் பொறுப்புகளையும் ஒப்படைக்கிறேன் என்றார் அந்த தொழிலதிபர். 

மொட்டைப் போட்ட புத்த பிச்சுகளிடம் ஒரு சீப்பு கூட விற்க முடியாது என்று நினைக்காமல் அந்த மூன்று மகன்களும் எவ்வளவு வித்தியாசமாக சிந்தித்தார்கள் பார்த்தீர்களா..?

நீங்களும் ஆட்டு மந்தைக் கூட்டம் போல் சிந்திக்காமல் ஒரு தொழிலதிபரைப் போல் மூன்றாவது கோணத்தில் சிந்திக்கிறீர்கள் என்றால் அந்த அளவுக்கு உங்கள் வாழ்க்கையிலும் உயர்வு இருக்கும் 

All the best

0 comments:

Post a Comment