Friday, August 28, 2020

Cami Walker: 29 Days 29 Gifts

    லகம் இப்பொழுது இருக்கக்கூடிய நிலையில் இந்த சம்பவம் நம் எல்லோருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

சான் பிரான்சிஸ்கா - வில் கேமி வால்கர் என்ற இளம்பெண் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். அந்த பெண்ணுக்கு மிகப்பெரிய கனவுகள் என்று எதுவும் இல்லை. மிகவும் சாதாரண கனவுகள் தான். 'எல்லோரையும் போல் நன்றாக படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும். பிறகு திருமணம் செய்துக் கொண்டு குழந்தைகளோடு சந்தோஷமாக வாழவேண்டும்.’ என்ற சாதாரண கனவுகள் தான். ஆனால், இதனை அடைவதே கேமி வால்கர் அவர்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது. கேமி வால்கர் நன்றாக படித்தார்கள். அதனால் நல்ல வேலை கிடைத்தது. ஒரு நல்ல பையனுடன் திருமணமும் நடந்தது.

Cami Walker
 

திருமணமான சில தினங்களிலேயே அவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது. கேமி வால்கர் அவர்களும் அடிக்கடி மருத்துவமனைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால், நாளாக நாளாக அவருடைய உடல் பலவீனமாகிக் கொண்டே தான் போனது. இனிமேல் இந்த ஆங்கில மருந்துகள், அல்லோபதி போன்றவற்றை நம்ப வேண்டாம் என்று இந்திய மருத்துவமுறை, ஆப்பிரிக்க மருத்துவமுறை என்று பல மருத்துவர்களை சந்திக்க ஆரம்பித்தார்கள்.

அப்படி ஒரு முறை ஆப்பிரிக்க மருத்துவரான எம்பாலி என்ற மருத்துவரை சந்தித்தார்கள். எம்பாலி பரிசோதித்தப்பிறகு கேமி வால்கரிடம் சொன்னார். “உன்னுடைய உடலைவிட, உன்னுடைய மனம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. அதனால் நாளை முதல் அடுத்து வரும் 29 நாட்கள் வரை யாராவது ஒருத்தருக்கு ஒரு பரிசு கொடு. பரிசு என்றால் பெரிய கிஃப்ட் தான் தரவேண்டும் என்ற அவசியமில்லை. நீ உள்ளன்போடு, ஆத்மார்த்தமாக எதை வேண்டுமானாலும் ஒருத்தருக்கு பரிசாக கொடுக்கலாம். அப்படி நீ தொடர்ந்து 29 நாட்கள் செய்தால் கண்டிப்பாக உன்னுடைய மனம் பலம் பெறும். உன்னுடைய மனம் பலம்பெற பலம்பெற உன்னுடைய உடலும் பலம்பெறும்" என்று எம்பாலி சொன்னார்.

இதைக்கேட்ட கேமி வால்கள் சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். கண்ணாடியைத் திருப்பினால் எப்படி டாக்டர் ஆட்டோ ஓடும் என்று "யாரோ ஒருவருக்கு நான் பரிசு கொடுப்பதால் எப்படி என்னுடைய உடல்நிலை குணமாகும்? இதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் கேமி வால்கர்.

இதனைத் தொடர்ந்து மறுபடியும் கேமி வால்கர் பல்வேறு மருத்துவர்களையும், பல மருத்துவ முறைகளையும் பின்பற்றினார்கள். அக்குபஞ்சர், கீமோதெரப்பி, மசாஜ்தெரப்பி என்று இரண்டு வருடம் உலகின் அனைத்து மருத்துவமுறைகளையும் முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால், இவ்வளவு முயன்றும் நாளுக்கு நாள் அவருடைய உடல்நிலை பலவீனம் அடைந்துக் கொண்டே தான் சென்றதே தவிர ஒரு நாளும் சரியாகவில்லை. மிகவும் சோர்ந்துப் போய்விட்டார். கேமி வால்கர்.

கேமி வால்கர்-க்கு எப்பொழுதும் டைரி எழுதக்கூடிய பழக்கம் இருந்தது. அப்படி ஒரு நாள் இரவு டைரி எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, அந்த ஆப்பிரிக்க மருத்துவர் எம்பாலி பற்றி அவரே எழுதிய குறிப்புகள் எதேர்ச்சையாக அவர் கண்ணில் பட்டது. 29 நாட்கள். 29 பரிசுகள்.

"நாமும் எவ்வளவோ மருத்துவமுறைகளை முயற்சித்துவிட்டோம். எதுவுமே பலன் கொடுக்கவில்லை. இந்த ‘29 நாட்கள், 29 பரிசுகள்' என்ற வழிமுறையையும் முயற்சித்து தான் பார்ப்போமே..!" என்று கேமி வால்கர் - க்கு தோன்றியது. நாளை காலை முதல் அடுத்து வரும் 29 நாட்களுக்கு யாருக்காவது ஒருவருக்கு எதாவது ஒரு பரிசு கொடுக்கலாம் என்று முடிவு செய்தார்.

(குறிப்பு: இங்கு பரிசு என்று சொல்வது விலையுயர்ந்த பொருட்களை வாங்கி, கலர்கலராக Giftwrapper-ல் சுத்திக் கொடுப்பது மட்டும் அல்ல.

1, ரோட்டோரமாக நாம் செல்லும்போது திடீரென்று யாராவது கண் தெரியாதவர்கள் ரோட்டைக் கடக்கமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ரோட்டைக் கடக்க உதவி செய்துவிட்டு அவர்களோடு உள்ளன்போடு ஒரு நிமிஷம் பேசிவிட்டு வருவது கூட அவர்களுக்கு நாம் கொடுக்கக்கூடிய பரிசு தான்.

2, காய்கறி வியாபாரம் செய்பவர்களிடம் அன்றைய தினத்தில் எந்தவொரு பேரமுமே பேசாமல் அவர்கள் சொன்ன விலைக்கே காய்கறியோ, கீரையோ வாங்கிவிட்டு வருவது அவர்களுக்கு நாம் கொடுக்கும் பரிசு தான்.

3, உச்சி வெயில் நேரத்தில் கூட நம் தெருவுக்கு குப்பை அள்ள வருபவர்களுக்கு ஒரு டம்ளர் மோர் கொடுப்பது அவர்களுக்கு நாம் கொடுக்கும் பரிசு தான்.

இப்படி காசு, பணம் இல்லாமல் உள்ளன்போடு மற்றவர்களை ஒரு நொடி மகிழ்வித்தாலும் அதுவும் நாம் அவர்களுக்கு கொடுக்கும் பரிசு தான்)

இது போன்று தான், அடுத்த 29 நாட்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பரிசு கொடுக்கவேண்டும் என்று நினைத்தார் கேமி வால்கர். ஆரம்பத்தில், அடுத்த 29 நாட்கள் நாம் யார்யாருக்கு என்னென்ன பரிசு கொடுக்கலாம் என்று பட்டியல் தயார் செய்தார் கேமி. ஆனால், 'நாளைக்கு நாம் இந்த பரிசு தான் கொடுக்கப் போகிறோம், இவருக்கு தான் கொடுக்கப் போகிறோம் என்று இன்றே முடிவு செய்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது. அடுத்த நிமிஷம் என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் இருந்தால் தானே வாழ்க்கை ஒரு சிலிர்ப்புடன் நகரும். அதனால் அன்றாடம் என்னென்ன தோன்றுகிறதோ அந்த பரிசை யாருக்காவது கொடுக்கலாம்' என்று முடிவு செய்தார் கேமி.

ஒவ்வொரு நாளும் நான் இன்றைக்கு இவர்களுக்கு இந்த பரிசைக் கொடுத்தேன். அதனால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் எப்படி மகிழ்ச்சி அடைந்தார்கள். இதனை டைரியில் எழுதும் போது எனக்கு எப்படி மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்தநாளும் யாருக்காவது ஒரு பரிசு கொடுக்கப் போகிறோம் என்று நினைக்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது என்று அத்தனையுமே எழுதினார்கள்.

இதை தொடங்கிய பத்தே நாட்களில் அவர்களுடைய மனதில் அவ்வளவு உற்சாகம். உடல்நிலையில் அவ்வளவு முன்னேற்றம். உடனே கேமி வால்கர் என்ன செய்தார்கள் தெரியுமா?

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று http://www.29gifts.org/என்ற ஒரு இணையத்தளத்தை ஆரம்பித்து தன்னுடைய அனுபவத்தை அந்த தளத்தில் எழுதத் தொடங்கினார்கள்.

கெட்ட வைரஸ் மட்டும் தான் வேகமாக பரவுமா? இது போன்ற நல்ல விஷயங்களும் வேகமாக பரவும். இந்த இணையதளமும் வேகமாகப் பரவியது. கேமி வால்கர் அவர்களின் அனுபவத்தைப் படித்த பலபேர் 'இந்த ஐடியா நல்லா இருக்கே.. நாமும் இனி அடுத்து வரும் 29 நாட்கள் யாருக்காவது ஒரு பரிசு கொடுக்கலாம்' என்று முடிவு செய்து பரிசு கொடுக்கத் தொடங்கினார்கள். அவர்களும் தங்களுடைய அனுபவத்தை அந்த இணையத்தளத்தில் எழுதத் தொடங்கினார்கள்.

அந்த அனுபவங்களைப் படிக்க படிக்க கேமி வால்கர் அவர்களும் மிகவும் உற்சாகம் அடைந்தார்கள். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரியத் தொடங்கியது

 

இதே போன்று ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்மணிக்கு கேன்சர் இருப்பதாக கண்டுபிடித்தார்கள். அந்த பெண்மணி சிறிது நாளில் இறந்துவிடுவார்கள் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால், அந்த பெண்மணியோ, நான் குறைந்தது இன்னும் 15 முதல் 20 வருடங்கள் உயிரோடு தான் இருப்பேன் என்று உறுதியாக சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். அவர்கள் சொன்னது போலவே அந்த கேன்சர் வந்த பிறகும் கூட 18 வருடங்கள் உயிர் வாழ்ந்தார்கள் அந்த பெண்மணி.

அவ்வளவு ஏன்? நம் எல்லோருக்கும் தெரிந்த இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி படித்திருக்கிறோம். அவருடைய 21 வயதிலேயே இந்த பையன் உயிர் வாழ்வது கஷ்டம். சீக்கிரமாக இறந்து விடுவான் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். சொன்ன மருத்துவர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள். ஆனால், ஸ்டீபன் ஹாக்கிங் 76 வயது வரை உயிரோடு தான் இருந்தார். அதுமட்டுமல்லாது, அறிவியலுக்கும், நம் உலகிற்கும் அவர் கொடுத்த கொடைகள் ஏராளம்.

இது போன்று உலகம் முழுவதும் நோய் வந்தவர்கள் கூட, ஒவ்வொரு நாளும் தன்னை சந்தோஷமாக வைத்துக் கொண்டு பிறரையும் சந்தோஷமாக வைத்துக் கொண்டதால் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் நோய் வந்துவிட்டதால், அந்த பயத்திலேயே இறந்தவர்களும் ஏராளம்.

உலகம் முழுவதும் ஒரு நோய் பரவுகிறது என்றால் அந்த நோய் நமக்கும் வரும் என்று பயப்பட வேண்டியதில்லை. ஆனால், அதே நேரம் நாம் அலட்சியமாகவும் இருக்கக்கூடாது. தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக பயந்துக் கொண்டே வாழக்கூடாது.

கேமி வால்கர் அவர்கள் 29 நாட்கள் தான் கொடுத்த 29 பரிசுகளையும் அந்த அனுபவங்களையும் தொகுத்து 29 Gifts என்று ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார்

 

அந்த புத்தகத்தில் கேமி வால்கர் என்ன சொல்கிறார் என்றால், “நோய் வந்தவர்கள் மட்டும் தான் இந்த பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. யாருக்கெல்லாம் மகிழ்ச்சி வேண்டுமோ அவர்கள் அனைவருமே இந்த பயிற்சியை மேற்கொண்டு பரிசோதனை செய்து பார்க்கலாம். இதன் மூலம், புதிதாக ஒருவருக்கு நீங்கள் பரிசு கொடுப்பதால், உதவி செய்வதால் உங்களுக்கு புது நண்பர்கள் கிடைக்கலாம். ஏற்கனவே இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிசு கொடுப்பதால், நமக்கும் அவர்களுக்கும் இருக்கக்கூடிய உறவு பலப்படும். ஒருவருக்கு பரிசுக் கொடுக்கும் போது நம்மைப் பற்றிய சுயமதிப்பு நமக்கே அதிகமாகும். இப்படி உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைவருமே பரிசுக் கொடுக்க வேண்டும், அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த உலகம் முழுவதுமே அன்பு மயமாகும்".

இந்த கதை ஒரு சிறிய தாக்கத்தையாவது உங்களுக்குள் ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்..

 All the best.

0 comments:

Post a Comment