Friday, September 4, 2020

Life After Retirment

    து ஒரு கற்பனை கதை. ஒரு நாட்டில் அரசரைத் தேர்ந்தெடுக்க ஒரு வழிமுறை வைத்திருந்தார்கள். அது என்னவென்றால், அந்த நாட்டிற்கு யார் வேண்டுமென்றாலும் அரசராக பொறுப்பேற்கலாம். ஆனால், அந்த அரசராக பொறுப்பேற்பவர் ஒரு வருடகாலம் மட்டுமே அரசராக நீடிக்க முடியும். ஒரு வருடத்திற்கு பிறகு, வேறு ஒரு புதிய அரசரைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த பழைய அரசரை ஆற்றுக்கு அக்கரையில் இருக்கக்கூடிய ஒரு காட்டில் கொண்டு சென்று விட்டுவிடுவார்கள். அந்த காட்டில் சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்கள் இருக்கும். அந்த மிருகங்கள் அந்த பழைய அரசனைக் கொன்று தின்றுவிடும். அதன்பிறகு மீண்டும் ஒரு அரசரைத் தேர்ந்தெடுப்பார்கள். இது தான் வழக்கம்.

அதனால் பெரும்பாலும் யாரும் அரசராக பொறுப்பேற்க முன்வர மாட்டார்கள். சபல புத்தி இருப்பவர்கள் மட்டும் "ஒரு வருடமாவது அரசராக சுபபோக வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போகலாம்" என்று சபலத்தில் அரசராக வருவார்கள். அவர்களும் ஒரு வருடத்திற்கு பிறகு அந்த காட்டில் வாழக்கூடிய சிங்கம், புலிகளுக்கு இரையாகி விடுவார்கள்.

ஒரு இளைஞன் அரசராக பொறுப்பேற்க முன்வந்தான். அவனிடம் மந்திரிகள் கேட்டார்கள்.

“உனக்கு கண்டிஷன் தெரியுமா?”

“தெரியும்...”

எல்லோரும் அவனை அரசராக ஏற்றுக் கொண்டார்கள். ஒரு வருடம் நன்றாக ஆட்சி நடத்தினான் அந்த இளைஞன். 

ஒரு வருடம் நிறைவுபெற்றதும், அவனை ஆற்றுக்கு அக்கரையில் விடவேண்டிய நாளும் வந்தது. பெரும்பாலும் அரசராக பொறுப்பேற்ற எல்லோரும் அழுதுக் கொண்டு தான் செல்வார்கள். ஆனால், அந்த இளைஞனோ மிகவும் சந்தோஷமாக காணப்பட்டான். ஒரு அரசன் என்ற மனப்பான்மையிலேயே அன்றும் காணப்பட்டான். எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

அவனை ஆற்றுக்கு அந்த பக்கம் கொண்டு விடுவதற்கு ஒரு சாதாரண படகு வந்திருந்தது. அவன் அதனைப் பார்த்து "ஒரு அரசர் பயணம் செய்கிற படகா இது.. வேறு ஒரு அழகான அலங்காரம் செய்யப்பட்ட கப்பலைக் கொண்டு வாருங்கள்" என்று உத்தரவிட்டான். 

எல்லோரும் இவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைத்தார்கள். “மரணத்தை நினைத்து பயந்து பைத்தியமாகிவிட்டான்" என்று எல்லோரும் கேலியாக சிரித்தார்கள். ஆனால், அவனோ மகிழ்ச்சியாக அந்த கப்பலில் ஏறி அனைவருக்கும் கையசைத்து விடைபெற்றான்.

அந்த படகோட்டி-க்கு மிகுந்த ஆச்சரியம். காரணம், அவன் தான் வருடாவருடம் பழைய அரசர்களை அந்த காட்டிற்கு கொண்டு சென்று விடுவான். அனைவருமே அழுது கொண்டு தான் வருவார்கள். ஆனால், இவன் மட்டும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டு வந்தான்.

அப்போது அந்த படகோட்டி கேட்டான். “உனக்கு பயமா இல்லையா..?” 

“எதற்கு பயம்?” என்றான் அந்த இளைஞன்.

“நீ இன்னும் சிறிது நேரத்தில் சாகப்போகிறாய்.. அந்த காட்டில் இருக்கக்கூடிய சிங்கள், புலி, கரடி போன்ற விலங்குகளுக்கு இரையாகப் போகிறாய்..” என்றான் படகோட்டி..

இவன் கலகலவென்று சிரித்தான். சிரித்துவிட்டு சொன்னான் இப்பொழுது அங்கு காடே இல்லை.

படகோட்டி அதிர்ச்சியுடன் "என்ன சொல்ற நீ?" என்றான்.

"இந்த ஒரு வருடம் அரசனாக இருந்து நான் என்ன செய்துக் கொண்டிருந்தேன்னு நெனச்ச?”
"நான் பொறுப்பேற்ற முதல் மாதத்திற்குள்ளாகவே அங்கு இருந்த அத்தனை விலங்குகளையும் பிடித்து மிருகக்காட்சி சாலையில் அடைத்துவிட்டேன்.

அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் அந்த காடுகளில் வேளாண்மை செய்ய சொல்லி விவசாய பூமியாக மாற்றிவிட்டேன். 

மேலும் மக்கள் வாழ்வதற்கான சூழலை அமைத்து அந்த காட்டை முழுமையான ஒரு நாடாக மாற்றிவிட்டேன். நம் நாட்டில உள்ள பல மக்கள் இப்போது அங்கு வாழ்கிறார்கள்.

அங்கு ஒரு பெரிய மாட மாளிகை ஒன்றைக் கட்டிவிட்டேன்.

இப்போது நான் அங்கு என்னுடைய மரணத்திற்காக செல்லவில்லை.. அந்த நாட்டின் அரசனாக பொறுப்பேற்க செல்கிறேன்.” என்றான் அந்த புத்திசாலி இளைஞன்..
 


பார்த்தீர்களா..? அந்த இளைஞன் எவ்வாறு மாற்றி யோசித்திருக்கிறான் என்று..!

இந்த சம்பவத்தை உங்கள் வாழ்க்கையோடு சிறிது ஒப்பிட்டுப் பாருங்கள்.. நம்மில் பலபேர் சராசரியாக 58 வயது வரை வேலைக்கு செல்வோம். அதன் பிறகு பணி ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். அதன்பிறகு என்ன செய்வது என்றே பலருக்கும் தெரியாது. 

சம்பாதிக்கும் வயதில் சிறிது கூட எதிர்காலத்திற்கு என்று சேர்த்து வைக்காமல் என்ஜாய் செய்வார்கள். பணி ஓய்வைப் பற்றிக் கவலைப்படவே மாட்டார்கள்.

பணி ஓய்விற்கு பிறகு, ’தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை’ என்ன செய்வதென்றே தெரியாது. பொழுது போகாது.

அது மட்டுமல்லாது, பணத்திற்கு பிள்ளைகளிடம் கெஞ்ச வேண்டிய நிலை வரும். 

ஒரு சிலபேர் 80 வயது வரை வாழ்கிறார்கள். ஏன்.. 100 வயது வரை வாழ்பவர்களைக்கூட நாம் பார்த்திருக்கிறோம். அப்படி இருக்கும் போழுது பணி ஓய்விற்கு பிறகு நமக்கு சராசரியாக 20 முதல் 40 வருட வாழ்க்கை இருக்கிறது. அதனைப் பற்றி யாருமே சிந்திப்பது இல்லை. 

பணியில் இருக்கும்வரை ஜாலியாக இருந்துவிட்டு, பணி நிறைவுக்குப் பிறகு யாரிடமாவது கையேந்தும் நிலை வந்தால் என்ன செய்வது?
 
 

அதற்காகதானே பிள்ளைகள் மீதி முதலீடு செய்திருக்கிறோம் என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது. அது முதலீடு அல்ல. கடமை..! ஏன் சொல்கிறேன் என்றால், எத்தனை பிள்ளைகள் பெற்றவர்களை அவர்களின் கடைசி காலத்தில் சரியாக பார்த்துக் கொள்கிறார்கள்? அப்படியே பார்த்துக் கொண்டாலும் எத்தனை வருடங்கள் பிள்ளைகளை நம்பி வாழ்ந்துவிட முடியும்? 

நமக்கு மாத வருமானம் என்று ஒன்று வந்தால் தான் நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். அதனைப் பற்றி சிறிது சிந்தியுங்கள்.

நீங்களும் அந்த இளைஞனைப் போல் பணி நிறைவிற்குப் பிறகும் உங்கள் வாழ்க்கையில் அரசராகத் திகழலாம்.
 
 

All the best.


0 comments:

Post a Comment