இந்த உலகின் மிகப் பெரிய மன்னர் அலெக்ஸாண்டர்.
இதெல்லாம் ஐரோப்பியர்கள் அவர்களைப் பற்றி அவர்களே பெருமையாகக் கூறிக் கொண்டது.
இவற்றில் எல்லாம் உண்மை இருந்தாலும், அதனைவிட மிகப்பெரிய உண்மை என்னவென்றால்,
ரோம பேரரசை விட இரண்டு மடங்கு பெரிய பேரரசை ஆண்டவன்.
அலெக்ஸாண்டர் ஆண்ட நிலப்பரப்பைவிட நான்கு மடங்கு பெரிய நிலப்பரப்பை ஆண்டவன்.
ஆசியா முழுவதும் அவன் பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கும் என்று சொல்வது போன்று வாழ்ந்த மன்னன் ஒருவன் இருந்தான் என்றால் அவன் செங்கிஸ்கான் தான்.
’செங்கிஸ்கானா... அவன் இரத்த வெறி பிடித்தவன் ஆயிற்றே.. அவன் இரக்கமே இல்லாதவன். போர் பைத்தியம்’ என்று வரலாறுகள் அவனைப் பற்றி சொன்னாலும், அவனுடைய பிரம்மிக்க வைக்கும் தலைமைப் பண்பு, எடுத்த காரியத்தை எப்படியாவது முடித்தே தீர வேண்டும் என்ற போர் குணம், அவனுடைய சுயக் கட்டுப்பாடு, அவனுடைய விழிப்புணர்வு, அவனுடைய திறமை என்று செங்கிஸ்கான் வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம்.
மங்கோலியர்கள் பல இனக்குழுக்களாக பிரிந்து வாழ்ந்த காலக்கட்டம் அது. பெரும்பாலான இனக்குழுவுக்கு சொந்த நிலம் கூட அன்று கிடையாது. நாடோடிகள் தான். ஒரு இடத்தில் தங்கி மேய்ச்சல் தொழிலை செய்வது, இன்னொரு இனக்குழுவை அடித்து அவர்கள் பொருட்களை பிடுங்குவது, பிறகு அங்கிருந்து வேறோரு இடத்திற்கு சென்று நாடோடியாக வாழ்வது தான் அவர்களது வாழ்க்கையே..
இப்படி எந்த நேரத்தில் எந்த குழு நம்மை வந்து அடிக்கும் என்று நிச்சயம் இல்லாத வாழ்க்கை. அப்படி ஒரு இனக்குழுவுக்குத் தலைவனாக வாழ்ந்தவர் தான் செங்கிஸ்கான் அவர்களின் அப்பா.
செங்கிஸ்கானுக்கு நான்கு வயதிலிருந்தே குதிரை ஏறுவது, வில் பயிற்சி என்று அத்தனையும் கற்றுக் கொடுத்தவர் அவருடைய அப்பாதான்.
ஆனால், செங்கிஸ்கானுக்கு 13 வயது இருக்கும் போது, அவருடைய அப்பாவை இன்னொரு இனக்குழு விஷம் வைத்து கொன்று விட்டது. நியாயப்படி பார்த்தால் அடுத்து செங்கிஸ்கான் தான் அந்த இனக்குழுவுக்குத் தலைவனாகி இருக்க வேண்டும்.
ஆனால், அப்படியெல்லாம் தலைவனை தேர்ந்தெடுக்க முடியாது என்று சொல்லி வேறொரு குடும்பம் தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொண்டது. அது மட்டுமல்லாது, செங்கிஸ்கானின் மொத்த குடும்பத்தையும் அந்த இனக்குழுவில் இருந்து விரட்டி அடித்தது அந்த புதிய குடும்பம்.
நேற்றுவரை நிச்சயமில்லாத ஒரு நாடோடிக் கூட்டத்தினுடைய தலைவரின் மகன். இன்று அதுவுமில்லை.
எதுவுமில்லை என்றால் என்ன? "ஒரு நாள் இந்த உலகத்தையே என்னுடைய காலுக்கு அடியில் கொண்டு வருவேன்" என்ற உயர்ந்த இலட்சியம் இருந்தது. அதை அடையும் அளவுக்கு தன்னம்பிக்கையும் போர் குணமும் நிறைந்திருந்தது. அது போதுமே?
ஆனால், அப்படி உலகத்தையே ஆளவேண்டும் என்றால் முதலில் சின்னச்சின்ன இனக்குழுக்களாக பிரிந்திருப்பவர்களை ஒன்று திரட்டி 'நாம் அனைவரும் மங்கோலியர்கள்' என்ற உணர்வை கொண்டு வர வேண்டும். அப்படி ஒன்று சேர்ந்தால் தான் அருகில் இருக்கும் சீனாவை அடிக்க முடியும். அதன் பிறகு ஆசியா.. அதனைத் தொடர்ந்து உலகத்தையே ஆளவேண்டும் என்ற தெளிவான திட்டமிடலும் அவரிடம் இருந்தது.
இந்த இலட்சியத் தீ செங்கிஸ்கானுக்கு வருவதற்கு காரணமே அவருடைய சிறுவயது நண்பன் ஜமுக்கா தான்.
செங்கிஸ்தான் தன்னுடைய ஆசை வெறும் ஆசையாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அதனை அடைய தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு, தன்னுடைய தகுதிகளையும் மேம்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு இனக்குழுவையும் போர் செய்து பிடிக்கத் தொடங்கினார்.
செங்கிஸ்கான் வெற்றிப் பெற்று பிடித்த இனக்குழுக்களை எதிரியாக பார்க்காமல் 'நாம் அனைவரும் மங்கோலியர்கள்' என்ற ஒற்றுமை உணர்வையும் விதைத்தார். அதே சமயத்தில் அவருடைய நண்பன் ஜமுக்காவும் பல இனக்குழுக்களை ஒன்று திரட்டி ஒரு தலைவனாக மாறிக் கொண்டு வந்தான்.
நண்பர்களாக இருந்த அவர்கள் இருவரையும் காலம் எதிரிகளாக மாற்றியது. சிநேகிதம் எல்லாம் பாலிய காலத்தில் மட்டும் தானா? ஒரு நண்பன் வளர வளர இன்னொரு நண்பனுக்கு சிநேகிதம் மறந்து விரோதமும் குரோதமும் தான் அதிகமாகுமா? இவர்கள் விஷயத்தில் அப்படிதான் நடந்தது.
பல போருக்கு பிறகு இப்பொழுது மங்கோலியா முழுவதும் மூன்று இனக்குழுதான் பெரிய இனக்குழுவாக மாறியது.
1, செங்கிஸ்கான் இணைத்த இனக்குழு.
2. ஜமுக்காவின் இனக்குழு
3, சைமனின் இனக்குழு..
இந்த மூன்று குழுக்களில் ஜமுக்கா, சைமனோடு இணைந்துவிட்டான். இறுதியில் இரண்டே இனக்குழுக்கள் தான். இந்த இரண்டு குழுவிற்கும் இடையே நடந்த போரில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவன் தான் மொத்த மங்கோலியர்களுக்கும் தலைவன்.
செங்கிஸ்கான் வாழ்க்கையில் மிக முக்கியமான போர் இது.
கி.பி. 1204 ஆம் ஆண்டு ஹெண்டை மலைப் பகுதியை ஒட்டி செங்கிஸ்கானின் மொத்த படையும் கூடாரம் அமைத்து தங்கியிருந்தார்கள். எதிரியின் இடத்தை நெருங்கிவிட்டார்கள். எப்பொழுது வேண்டுமானாலும் போர் ஆரம்பமாகலாம் என்ற சூழல்.
செங்கிஸ்கான் முதலில் தன்னுடைய ஒற்றர் படையை அனுப்பி எதிரி படையை உளவுப் பார்த்துவிட்டு வர சொன்னான். உளவு பார்த்துவிட்டு வந்த ஒற்றன் சொன்ன தகவல் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
"எதிரி படை நம் படையை விட பலமடங்கு பெரிய படை மன்னா.. அதிலும் அவர்களது குதிரைப் படையை நம்மால் சமாளிக்கவே முடியாது" என்று சொன்னான் அந்த ஒற்றன்.
செங்கிஸ்கான் யோசித்தான். தன் வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான போர். இந்த போரில் ஜெயித்தால் தான் அடுத்த ஆயிரம் வருடங்கள் தாண்டியும் நமது பெயர் நிலைக்கும். எதிரி படை எண்ணிக்கையில் வேண்டுமானால் பெரிதாக இருக்கலாம். ஆனால், நம்முடைய எண்ணங்கள் அதைவிட பெரியதாக இருக்க வேண்டும். அதை செயல்படுத்துவதில் ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்று யோசித்தான்.
எதிரியை நாம் ஜெயிக்க வேண்டுமென்றால், எதிரிக்கு நம்மீது ஒரு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.. அப்படி ஒரு பயத்தை மட்டும் அவனுக்கு உருவாக்கி விட்டாலே போதும். இந்த போரில் நாம் ஜெயித்ததற்கு சமம் என்று யோசித்து ஒரு வித்தியாசமான முடிவெடுத்தான்.
அந்த வித்தியாசமான யோசனை என்னவென்றால் தன்னுடைய படையை அழைத்து இன்று இரவு முழுவதும் ஓய்வெடுங்கள். ஆனால், நீங்கள் ஓய்வெடுக்கும் போது ஒரு இடத்தில் தீ மூட்டி 5 அல்லது 10 பேராக ஓய்வெடுப்பீர்கள் அல்லவா? அதற்கு பதிலாக ஒவ்வொருவரும் ஐந்தைந்து இடங்களில் தீ மூட்டி ஓய்வெடுங்கள் என்று சொன்னான். அவன் சொன்னது போன்றே ஒவ்வொரு படை வீரனும் தனித்தனியாக ஐந்தைந்து இடங்களில் தீ மூட்டி குளிர் காய்ந்தார்கள்.
தூரத்தில் மலைக் குன்றுகளில் இருந்து தீ எரிகிற காட்சியை மட்டும் பார்த்து பிரம்மித்து நின்றது எதிரிபடை.
செங்கிஸ்கான் படை இவ்வளவு பெரிய படையா? நம்பவே முடியவில்லையே. இவ்வளவு பலமான படையில் நாம் எப்படி வெற்றி பெறுவது என்று இரவோடு இரவாக எதிரிபடையில் ஒரு பகுதி வீரர்கள் தப்பித்து போகிறார்கள். அப்படித் தப்பித்து சென்றவர்களும் ஒரு பெரிய பள்ளத்தாக்கில் விழுந்ததாக வரலாறு சொல்கிறது.
அதிகாலையில் ”படையில் ஒரு பகுதியைக் காணவில்லை. அப்படி ஓடி போனவர்களும் பள்ளத்தாக்கில் விழுந்து இறந்துவிட்டார்கள்” என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் எதிரியின் மனோபலம் பாதியாக குறைந்துவிட்டது.
போர் ஆரம்பித்ததும் செங்கிஸ்கானின் பல போர் தந்திரங்கள் மூலமாக மிகவும் எளிதாகவே அந்த போரில் செங்கிஸ்கான் படை வெற்றியைக் கைப்பற்றியது. அந்த போரில் வெற்றி பெற்றது தான் செங்கிஸ்கானின் முக்கியமான திருப்புமுனை.
அந்த போரில் ஜெயிக்க முக்கிய காரணமே போருக்கு முதல் நாள் இரவு ஐந்தைந்து பேராக தீ மூட்டி குளிர்காயாமல் ஒருவரே ஐந்தைந்து இடங்களில் தீ மூட்டி குளிர் காய்ந்தது தான் என்று வரலாறு சொல்கிறது.
எதிரி படை எண்ணிக்கையில் பெரிதாக இருந்தாலும் செங்கிஸ்கானின் ஒரு சின்ன மாற்றி யோசிக்கும் திறன் எதிரிக்கு பயத்தைக் காட்டியது. பயத்தோடு வாழ்பவனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் வாழ்பவன் வெற்றியைக் கடவுளாலும் தடுக்க முடியாது.
நீங்களும் உங்கள் பயத்தைத் தூக்கி எறியுங்கள். உங்கள் எண்ணங்கள் உயர்வானதாக இருக்கட்டும். அதை செயல்படுத்துவதில் ஒரு வித்தியாசம் இருக்கட்டும். மாத்தி யோசிக்கும் திறன் உங்களிடம் இருந்துவிட்டால் உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
All the best.



0 comments:
Post a Comment