ஷாஜகானுக்கு இன்னொரு பெரிய கனவும் இருந்தது. அது என்னவென்றால், தன் மனைவியின் கல்லறையில் வெள்ளைப் பளிங்கு தாஜ்மஹால் இருப்பது போல், தான் இறந்தபிறகு தன்னுடைய கல்லறையின் மேல் அழகழகான கருப்பு நிற பளிங்கு கற்களால் ஆன இன்னொரு கருப்பு நிற தாஜ்மஹால் (Black Marble Tajmahal) கட்டவேண்டும் என்பது தான் அது.
வெள்ளை தாஜ்மஹால். அதன் அருகிலேயே அழகாக இன்னொரு கருப்பு தாஜ்மஹால். இரண்டும் அருகருகே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஆனால், நடந்தது நமக்கு நன்றாகவே தெரியும். ஷாஜகானுக்குப் பிறகு அவருடைய மகன் ஒளரங்கசிப் ஷாஜகானை சிறையில் அடைத்துவிட்டு அரசனாகிவிட்டான்.
ஷாஜகான் இறந்ததுமே அவருடைய கருப்பு தாஜ்மஹால் ஆசையைப் பற்றி ஒளரங்கசிப்பிடம் மந்திரிகள் சொன்னார்கள். அதற்கு ஒளரங்கசிப் சொன்ன பதில் என்ன தெரியுமா?
"என்னது இன்னொரு கருப்பு தாஜ்மஹாலா? ஏற்கனவே இருக்கக்கூடிய இந்த வெள்ளை தாஜ்மஹாலே தண்டச்செலவு. இதில் இன்னொன்று வேறா..? தாஜ்மஹால்லையே இன்னும் நிறைய இடம் இருக்கிறது. அங்கயே அவரைக் கொண்டு போய் புதையுங்கள்" என்று சொல்லிவிட்டான் ஒளரங்கசிப்.
ஷாஜகானின் கருப்பு தாஜ்மஹால் கனவு நிராசையாகி விட்டது. அதுபோல் நமக்குப் பிறகு வருபவர்களும் நம்மைப் போலவே சிந்தித்து நம்முடைய கனவை நிறைவேற்றுவார்கள் என்று எந்த உத்திரவாதமும் கிடையாது.
ஆனால், தமிழ் மன்னர்கள் சற்றே வித்தியாசமானவர்கள்.
அவர்கள் இதுபோல தன்னுடைய காதலிக்கு மிகப்பெரிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றோ, தான் இறந்த பிறகு தன்னுடைய கல்லறை மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்றோ ஆசைப்படவில்லை.
தன்னைவிட பெரியவன் இறைவன் ஒருவனே. கடவுளுக்கு தான் மிகப்பெரிய கோவில்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டார்கள்.
அப்படி இராஜைராஜசோழனால் தஞ்சாவூரில் கட்டப்பட்டது தான் தஞ்சை பெரிய கோவில். கோவிலைக் கட்ட மிகப்பெரிய நிதி உதவி அளித்தார் மன்னர் இராஜ இராஜ சோழன்.
![]() |
| Shajahan vs Raja Raja Chozhan |
ஒரு பிரபலமான வியாபார வாசகம் ஒன்று உள்ளது.
“ஒரு தொழிலை ஆரம்பித்த பாட்டனுக்கு அது உயிர்.
அப்பனுக்கு அது வாழ்க்கை.
மகனுக்கு அது பொழுதுபோக்கு.
பேரனுக்கோ அது தொந்தரவு"
தலைமுறை கடந்தும் அது உயிராக நினைக்கப்பட வேண்டுமென்றால் அந்த வியாபாரத்தில் இருந்து இலாபம் வந்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது தான் அடுத்த தலைமுறையும் அந்த தொழிலைப் பார்த்துக் கொள்வார்கள்.
இலாபம் வரக்கூடிய தொழிலுக்கே இதுதான் நிலை.
ஒரு தொழிலுக்கே இதுதான் நிலை என்றால், கோவிலுக்கு?
இராஜ இராஜ சோழன் அவருடைய காலத்தில் தர்ம சிந்தனையோடு கோவில் நெய்வேத்தியத்திற்கு நிதி கொடுத்தார். ஆனால், அவருக்குப் பிறகு வரக்கூடியவர்களும் அவரைப் போன்றே தர்ம சிந்தனையோடு இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது.
அதனால், நம் காலத்திற்கு பிறகும் கோவிலில் ஆறுகால பூஜையும், கடவுளுக்கு நெய்வேத்தியங்களும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று யோசித்து ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தார் மாமன்னன் இராஜ இராஜ சோழன்.
ஒரு நாளைக்கு கோவிலில் இருக்கக்கூடிய பிள்ளையாருக்கு 150 வாழைப்பழங்கள் நெய்வேத்தியமாக கொடுக்க வேண்டும். அதனால், இராஜ இராஜ சோழன் ஒரு பெரும் தொகையை கோவில் கருவூலத்திற்கு என்று ஒதுக்கிவிடலாம் என்று முடிவெடுத்தார். அது மட்டுமல்லாது தஞ்சாவூரைச் சுற்றியுள்ள சில வணிகர்களிடம் கோவில் கருவூலத்தின் சார்பாக அந்த பெரும் தொகையை கடனாக கொடுத்துவிடலாம். அந்த வணிகர்கள் வாங்கிய கடனுக்கு வட்டியாக தினமும் சில வாழைப்பழங்களை கோவிலுக்குக் கொடுக்கட்டும் என்று முடிவெடுத்தார் இராஜ இராஜ சோழன்.
இந்த யோசனையின் படி இராஜ இராஜ சோழன் ஒரு 360 காசுகளை கோவில் கருவூலத்திடம் கொடுத்துவிட்டார். கோவில் கருவூலம் அந்த 360 காசுகளைப் பிரித்து பின்வரும் வணிக சங்கத்திற்கு கடனாகக் கொடுத்தது
தஞ்சாவூர் புறம்பாடி நித்தவினோத பெருந்தெரு வணிகர்கள் சங்கத்திற்கு 60 காசுகள்
திரிபுவன மாதேவி பேரங்காடி வணிகர்கள் சங்கத்திற்கு 60 காசுகள்
மும்முடி பெருந்தெரு வணிகர்கள் சங்கத்திற்கு 120 காசுகள்
வீரசிகாமணி பெருந்தெரு வணிகர்கள் சங்கத்திற்கு 120 காசுகள்
இவ்வாறு அந்த 360 காசுகளை பிரித்துக் கொடுத்தது கோவில் கருவூலம். அதன்படி
120 காசுகள் வாங்கிய வணிகர்கள் ஒரு நாளைக்கு 50 வாழைப்பழங்கள் என்றும்
60 காசுகள் வாங்கிய வணிகர்கள் ஒரு நாளைக்கு 25 வாழைப்பழங்கள் என்றும்
ஒரு நாளைக்கு 150 பழங்கள் வட்டியாகக் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த தகவல்கள் அனைத்துமே கோவிலின் விநாயகர் விக்கிரகத்திற்கு பக்கத்திலேயே ஆதாரமாக பொறிக்கப்பட்டுள்ளது.
![]() |
| Thanjavur Inscription |
அன்றைய விலைவாசியின் படி ஒரு காசுக்கே 1200 வாழைப் பழங்கள் வரை வாங்க முடியும் என்று சொல்கிறார்கள். அந்த விதத்தில் பார்த்தால் வட்டியும் மிகவும் குறைவுதான்.
இதன் மூலம் அந்த வணிக சங்கங்கள் வட்டியாக வாழைப்பழத்தை ஆயிரம் வருடங்கள் தாண்டியும் இன்று வரை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
150 வாழைப்பழம் கடவுளுக்கு நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டாலும், படைக்கப்பட்ட பிறகு மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
சிறுவர்களாக இருக்கக்கூடியவர்கள் அந்த கோவிலுக்கு தினமும் வந்து வாழைப்பழங்களை சாப்பிட்டு வளர்ந்தார்கள் என்றால், பிற்காலத்தில் வளர்ந்து அவனும் கோவிலுக்கு ஏதாவது நிதி உதவி அளிக்க வேண்டும் என்று நினைப்பான். அதனால், மக்களுக்குள் தர்ம சிந்தனை பெருகியது.
வணிகர்கள் வாங்கிய கடனுக்கு வட்டியாக கோவிலுக்கு வாழைப்பழங்கள் கொடுக்கிறார்கள். அவர்களுக்கும் தர்ம சிந்தனை பெருகியது.
இவ்வாறு தர்ம சிந்தனை நாடு முழுவதும் பரவியது.
இதுபோல கோவிலுக்குத் தேவையான கற்பூரம், நெய், எண்ணெய் போன்ற பல பண்டங்களும், வணிகர்கள் கொடுத்த வட்டிதான் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
ஒருவேளை மன்னர் இராஜ இராஜ சோழன் மட்டும் தினமும் பழம் வாங்க அவருடைய காசை மட்டுமே கொடுத்திருந்தால், தஞ்சாவூர் பெரிய கோவிலின் புகழ் அவர் காலத்தோடு முடிந்திருக்கும். ஆனால், அவர் கையாண்ட இந்த வித்தியாசமான யுக்தி அவர் தலைமுறைத் தாண்டியும் பல வருடங்கள் நிலைத்து நிற்கச் செய்தது. மக்களிடமும் தர்ம சிந்தனை பெருகியது.
இராஜ இராஜ சோழன் கையாண்ட இந்த யுக்தி தான் பிற்பாடு வந்த பல கோவில்களில் பின்பற்றப்பட்டது. அதன் மூலம் ஆறுகால பூஜையும், நெய்வேத்தியங்களும் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் பல கோவில்கள் காலங்கள் தாண்டியும் நிலைத்து நிற்க இந்த வித்தியாசமான யுக்திதான் காரணம் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
இந்த முறையை தான் MBA பாடப்பிரிவில் Recurring Income அதாவது தொடர் நிதி வருவாய் என்று பாடமாக வைத்திருக்கிறார்கள்.
இராஜ இராஜ சோழன் கையாண்ட இந்த வித்தியாசமான யுக்தி உங்களையும் உயர்வாக சிந்திக்கத் தூண்டும் என்று நான் நம்புகிறேன். இது போல் நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் உயர்வானதாக இருந்தால் நாம் செய்யக்கூடிய செயல்களும் உயர்வானதாக அமையும்.
All the best.




0 comments:
Post a Comment