ஒரு தொழிலில் விற்கக்கூடிய பொருள் நல்ல தரத்துடன் இருப்பதாலோ அல்லது விலை குறைவாக இருப்பதாலோ மட்டும் அந்த பொருளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உங்கள் பொருளை எந்த அளவுக்கு வித்தியாசமாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் அந்த தொழில் முழுமையான வெற்றி பெறும். அந்த வகையில் ”ஸ்மிர்னாஃப் வோட்கா” நிறுவனம் தன்னுடைய விற்பனையை அதிகப்படுத்த எந்த அளவுக்கு வித்தியாசமான யுக்தியை கையாண்டார்கள் என்பதைத் தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
![]() |
| Smirnoff Brand |
1950-களின் இறுதியில் ஸ்மிர்னாஃப் நிறுவனம் வோட்கா எனும் மதுபானத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த காலக்கட்டத்தில் அமெரிக்க சந்தையில் ஸ்காச், ஜின், ரம், விஸ்கி போன்ற மதுவகைகள் மட்டும் தான் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. அதனால், வோட்கா என்ற புதுவகையான மதுவகையை அமெரிக்க சந்தைக்கு கொண்டு வந்தால், அதிக இலாபம் பார்க்கலாம் என்று நினைத்து ஸ்மிர்னாஃப் வோட்கா-வை அறிமுகப்படுத்தினார்கள்.
ஆனாலும், ஸ்மிர்னாஃப் வோட்கா விற்பனையாகவே இல்லை. அதற்கு என்ன காரணம் என்றால், அந்த காலக்கட்டத்தில் பொதுவாகவே அமெரிக்கர்கள் அந்நிய நாட்டு பொருட்களை ஆதரிக்க மாட்டார்கள். அதுவும், ஸ்மிர்னாஃப் வோட்கா ஒரு ரஷ்ய நிறுவனம். அந்த சமயத்தில் அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே மிகப்பெரிய பனிப்போர் நிலவிக் கொண்டிருந்ததால், இந்த மதுபானத்தை ரஷ்ய குளிர்பானம் / கம்யூனிஸ்ட் குளிர்பானம் என்று கூறி மக்கள் ஸ்மிர்னாஃப் வோட்காவை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஸ்மிர்னாஃப் வோட்கா நிறுவனம் விலையைக் குறைத்தார்கள். நமது பொருளை ஒரு பெரிய பிராண்டாக மாற்ற வேண்டும் என்றால் விளம்பரத்தால் மட்டும் தான் முடியும் என்று ஏகப்பட்ட விளம்பரத்தை நடத்தினார்கள். விளம்பரத்திற்காக மட்டுமே பல மில்லியன் டாலரை செலவழித்தார்கள். ஆனால், எவ்வளவு விளம்பரம் செய்தும் வியாபாரம் துளியளவு கூட அதிகரிக்கவில்லை.
பிறகு, ”விற்பனையை அதிகப்படுத்த வெறும் விளம்பரம் மட்டுமே போதாது. நமது பொருளின் தனிப்பட்ட சிறப்பு என்ன?” என்பதைப் பற்றி யோசித்தார்கள். அதாவது நமது பொருளின் பிரத்யேகமான அம்சத்தை மட்டும் கண்டுபிடித்து அதை மட்டும் பெரிதுபடுத்தி விற்பனையை அதிகரிக்கலாம் என்று யோசித்தார்கள்.
அந்த வகையில் ஸ்மிர்னாஃப் வோட்காவின் பிரத்யேகமான அம்சம் என்னவென்றால், வோட்கா குடித்தால், குடித்திருந்ததற்கான வாடையே வாயிலிருந்து வராது என்பதை கண்டுபிடித்தார்கள். இது போதுமே? இதை வைத்து விளம்பரப்படுத்தி விற்பனையை அதிகரிக்க ஒரு இரண்டு வரி டேக் லைனை (Tagline) உருவாக்கினார்கள். அது என்னவென்றால்,
"Smirnoff Vodka..
It takes your breath away,
and It leaves you breathless.."
அதாவது ஸ்ம்ரினாஃப் உங்கள் மதுமணக்கும் மூச்சை வெளிப்படுத்தாது.. நீங்கள் ஆச்சரியத்தில் மூர்ச்சையாகி நிற்பீர்கள் என்ற அந்த இரண்டு வரி டேக் லைன் படுவேகமாக மக்களை சென்றடைந்த்தது. கோடிக்கணக்கில் விளம்பரம் செய்தும் அதிகமாகாத விற்பனை, சிறிது வித்தியாசமாக யோசித்து கொண்டுவரப்பட்ட இந்த இரண்டு வரி டேக்லைனால் அதிகமாகியது.
![]() |
| Smirnoff Vodka |
விற்பனை எந்த அளவுக்கு உயர்ந்தது தெரியுமா? இந்த டேக்லைன் கொண்டுவரப்பட்ட சிறிது நாளிலேயே அதாவது 1954 ஆம் ஆண்டு இதன் விற்பனை 15 மில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தது. அடுத்த இரண்டே வருடத்தில் அது 50 மில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தது. இன்றைய தேதியில் ஸ்மிர்னாஃப் வோட்கா-வின் விற்பனை வருடத்திற்கு ஆயிரம் மில்லியன் டாலரைத் தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாது உலகளவில் விற்பனையாகக்கூடிய Top 3 Top Selling Liquor in the world-ல் ஸ்மிர்னாஃப் வோட்காவும் ஒன்று.
![]() |
| Maathi Yosi |
கோடிகோடியாக விளம்பரத்தை அதிகப்படுத்தியும், பணத்தை செலவழித்தும் செய்யமுடியாத அதிசயத்தை ஒரு சின்ன வித்தியாசமான சிந்தனை செய்துவிட்டது. நீங்களும் உங்களது பொருளின் விற்பனையை அதிகப்படுத்த, ஏற்கனவே சந்தையில் இருக்கக்கூடிய பொருளை விட, உங்கள் பொருள் எந்த அளவுக்கு வித்தியாசமானது என்று சிறிது வித்தியாசமாக யோசியுங்கள்.
நீங்கள் ஒரு ஆட்டுமந்தை கூட்டம் போல் சிந்திக்காமல், மற்றவர்களில் இருந்து நான் எப்படி தனித்தவன், வித்தியாசமானவன் என்பதை பற்றி யோசியுங்கள். அதுதான் உங்கள் அலுவலகத்திலும், உங்கள் தொழிலிலும் உங்களை அடுத்தக்கட்டத்திற்கு முன்னேற்றும்.
All the best.



0 comments:
Post a Comment