Friday, October 9, 2020

கடவுள் தரிசனம் - மாத்தி யோசி

     கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஓனர் அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நண்பர் ஒருவரோடு திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தாராம். அவருடைய நண்பரும் ஒரு தொழில் அதிபர் தான். அப்பொழுது அவருடைய நண்பர் சுவாமி தரிசனத்திற்கு ஒரு பெட்டியோடு வந்திருந்தாராம். அப்பொழுது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஓனர் அவர்கள் “இது என்ன பெட்டி?” என்று கேட்டிருக்கிறார்.

அவர் நண்பர் சொன்னார், ”இந்த பெட்டியில் இலட்ச ரூபாய் பணம் இருக்கிறது. தொழிலில் இலாபமாக வந்த பணம். கடவுளுடைய அனுக்கிரகத்தால் கிடைத்த பணம். அதனால் தான் இந்த பணத்தை கடவுளுக்கே காணிக்கையாக செலுத்தலாம் என்று எடுத்து வந்துள்ளேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

உடனே, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஓனர் அவர்கள், ”அந்த இலட்ச ரூபாயை சிறிது தாருங்களேன்.” என்று வாங்கிக் கொண்டு சென்று அந்த இலட்ச ரூபாய்க்கும் ஐநூறு ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய்க்கான கட்டண தரிசன டிக்கெட்களை வாங்கிக் கொண்டு வந்தாராம். 

பிறகு அந்த நண்பரிடம் இந்த டிக்கெட்களை கொடுத்து, ”அங்கு இலவச தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களிடம் இதனைக் கொண்டு போய் கொடுங்கள்” என்று சொல்லியுள்ளார். 

அந்த தொழில் நண்பரும் இலவச தரிசன வரிசையில் காத்திருந்த அந்த மக்களிடம் அந்த கட்டண டிக்கெட்களை கொடுத்தார். அந்த டிக்கெட்களை வாங்கிப் பார்த்த மக்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

”நாங்கள் சாமியை தரிசிக்க 18 மணி நேரம் ஆகுமோ? அல்லது 20 மணி நேரம் ஆகுமோ” என்று பயந்துக் கொண்டிருந்தோம். ஆனால், நீங்கள் இந்த கட்டண டிக்கெட்களை இலவசமாக கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி. நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். அந்த திருப்பதி பெருமாளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்” என்று அந்த நண்பரை வாழ்த்தி வணங்கினார்கள். 

அப்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஓனர் அவர்கள் சொன்னார், “நீ உண்டியலில் இந்த தொகையைப் போட்டிருந்தாலும், அது திருப்பதி தேவஸ்தானத்துக்குப் போயிருக்கும். இப்படி கட்டண டிக்கெட்டுகளாக எடுத்தாலும் அது திருப்பதி தேவஸ்தானத்துக்குதான் போயிருக்கும். ஆனால், நீ நேரடியாக தொகையைப் போட்டிருந்தால், இத்தனை பேரின் மகிழ்ச்சியும், வாழ்த்தும் உனக்கு கிடைத்திருக்காது. அது மட்டுமல்ல நீ கடவுள் உண்டியலில் நேரடியாக போட்டிருந்தாலும், அது கடவுளுக்கு சென்று சேர்ந்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால், நீ இப்போது செய்த இந்த சேவை கண்டிப்பாக கடவுளை நேரடியாக சென்று சேர்ந்திருக்கும்.” என்று சொன்னார்.

நீங்களும் உங்கள் வாழ்க்கையில், உங்கள் துறையில் எப்படி மற்றவர்களுக்கு இதுபோல் உதவலாம் என்று சிறிது வித்தியாசமாக யோசித்துப் பாருங்கள். அப்படி உங்கள் சுயநலத்தில் சிறிது பொதுநலமும் கலந்து சிந்திக்கத் தொடங்கினால், உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. 



All the best.

2 comments:

  1. அற்புதமான ஆலோசனை.
    கோடி புண்ணியம்..

    ReplyDelete
    Replies
    1. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்..!!
      அதற்கு உதவுவது எண்ணிலடங்கா புண்ணியம்.. :)

      Delete