ஜப்பான் நாட்டு மக்களுக்கு மீன் மிகவும் பிடிக்கும். அதிலும் ஜப்பானில் மீன் சமைப்பவர்களும் சரி.. மீன் சந்தையில் மீன் விற்பனை செய்பவர்களும் சரி.. ஒரு மீனைப் பார்த்ததுமே அந்த மீன் எவ்வளவு புதிய மீன் என்றும் அந்த மீன் எந்த அளவுக்கு சுவையாக இருக்கும் என்றும் கண்டுபிடித்து விடுவார்களாம். அந்த அளவுக்கு திறமைசாலிகள்.
ஆனால், ஜப்பான் நாட்டு மக்களுக்கு இவ்வளவு தூரம் மீன் சாப்பிட பிடித்திருந்தாலும், ஒரு துரதிர்ஷ்டமான செய்தி என்னவென்றால், ஜப்பான் நாட்டில் உள்ள கடற்பரப்பை சுற்றி பெரும்பாலும் மீன்கள் வளரவே வளராது.
கடற்கரையில் இருந்து ஜப்பானிய மீனவர்கள் இரண்டு மூன்று நாட்கள் பயணம் செய்தால் தான் மீன்களையே பிடித்துக் கொண்டு வர முடியும். ஆனால், இதில் பிரச்சனை என்னவென்றால், இரண்டு மூன்று நாட்கள் பயணம் செய்து மீனைப் பிடித்து அதன் பிறகு இரண்டு நாட்கள் பயணம் செய்து தான் கடற்கரைக்கு விற்பனைக்கு வரும். அதனால், வரும் வழியிலேயே சில மீன்கள் அழுகிவிடும். மீதி இருக்கக்கூடிய மீன்களும் அந்த அளவுக்கு சுவையாக இருப்பதில்லை. அதனால், அந்த மீன்கள் குறைந்த விலைக்கு தான் விற்பனையானது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஜப்பானிய மீனவர்கள் சிறிது யோசித்தார்கள். அதன் பிறகு, படகுகளிலேயே குளிர்சாதன பெட்டி ஒன்றையும் எடுத்து செல்லலாம் என்று திட்டமிட்டார்கள். மீனைப் பிடித்த உடனேயே அந்த மீன்களை குளிர்சாதன பெட்டியில் போட்டு விட்டார்கள். ஆனால், இதனால் மீன்கள் கெட்டுப் போகாமல் இருந்ததே தவிர, பிடித்துக் கொண்டுவரப்பட்ட மீன்கள் அந்த அளவுக்கு சுவையாக இல்லை. அதனால், அந்த மீன்கள் குறைந்த விலைக்கு தான் விற்பனையானது.
அடுத்து இதற்கு மாற்றாக ஜப்பானிய மீனவர்கள் யோசித்து படகுகளிலேயே மிகப்பெரிய மீன் தொட்டிகளையே கொண்டு சென்றார்கள். இது போல் கடலில் அவர்கள் பிடித்த மீன்களை பிடித்ததுமே இந்த தொட்டியில் போட்டுவிடுவார்கள். இதனால், கடற்கரைக்கு வரும் வரைக்குமே அந்த மீன்கள் உயிரோடு புதிய மீன்களாகவே இருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால், மீன்கள் அனைத்தும் உயிரோடு இருந்ததே தவிர, புதியதாக இல்லை. ஏனென்றால், அந்த சின்ன தொட்டிக்குள் நிறைய மீன்களைப் போட்டதால், சிறிது நேரம் அந்த மீன்கள் தொட்டிக்குள் நீந்திவிட்டு மீதி நேரம் அசைவற்ற நிலையிலேயே இருந்தது. அசைவற்ற நிலையிலேயே இருந்ததால், அந்த மீன்களும் அந்த அளவுக்கு சுவையாக இல்லை என்று குறைந்த விலைக்கே விற்பனையானது.
என்ன செய்யலாம் என்று ஜப்பானிய மீனவர்கள் மறுபடியும் மாத்தி யோசித்து ஒரு வித்தியாசமான தீர்வை கண்டுபிடித்தார்கள்.
அது என்னவென்றால், அந்த படகில் இருந்த அந்த மீன் தொட்டிக்குள் முதலில் எல்லா மீன்களையும் பிடித்து போட்டு விடுவார்கள். எல்லா மீன்களையும் போட்டு முடித்த பிறகு, ஒரு குட்டி சுறா மீனையும் அந்த தொட்டிக்குள் போட்டு உலாவ விட்டார்கள். சுறா மீன் உள்ளே வந்த பிறகு மற்ற அனைத்து மீன்களும் உயிருக்கு பயந்து நீந்திக் கொண்டே இருந்ததாம். அதில் ஒரு சில மீன்களை அந்த குட்டி சுறா மீன் சாப்பிட்டு விட்டாலும், மீதி மீன்கள் எல்லாம் நீந்திக் கொண்டே இருந்தது. மீன்கள் எல்லாம் சுறுசுறுப்பாக இருந்ததால், அவைகள் கடற்கரைக்கு வருவரைக்கும் புதியதாகக் காணப்பட்டது. எல்லா மீன்களும் நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால், ஜப்பானிய மக்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
இந்த கதையிலிருந்து இரண்டு விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளலாம்.
அசைவற்ற நிலையிலிருந்த அந்த மீன்கள் எப்படி சுறா மீன் உள்ளே வந்ததும் சுறுசுறுப்பாக மாறியதோ, அதே போல் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் தான் நம்முடைய வாழ்க்கையும் சுவாரசியமாக மாறும். இல்லையென்றால், வாழ்க்கைப் போரடித்துவிடும். அது மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய சவால்களை, பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் அதை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.
இரண்டாவது, மாத்தி யோசிக்கும் திறன். ஜப்பானிய மீனவர்களைப் போல நீங்களும் முடிந்த அளவுக்கு வித்தியாசமாக சிந்தித்து உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள்.
All the best.


0 comments:
Post a Comment