ஒரு மிகப்பெரிய தொழிலதிபர், உதாரணத்திற்கு அம்பானி போன்று மிகப்பெரிய தொழிலதிபர் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தொழிலதிபரின் மகளுக்குத் திருமணம். அதனால் அவர், அவருடைய மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் திருமண தினத்தன்று ஒரு மிகப்பெரிய ஆடம்பர கார் (Luxury Car) பரிசளிக்க விரும்பினார்.
ஆடம்பர கார் என்றால் சாதாரண பென்ஸ் (Benz), பி.எம்.டபிள்யூ (BMW) போன்று அல்ல. அதிலும் மிகவும் வசதிப் படைத்தவர்களுக்கு என்று Limited Editions என்று ஒரு சில கார் நிறுவனங்கள் தனியாக புத்தம்புது வசதிகளுடன் கூடிய ஆடம்பர கார்களை வெளியிடுவார்கள். அது போல் அந்த தொழிலதிபர் ஒரு காரை பரிசாக அளிக்க விரும்பினார். அதுவும் இந்த உலகத்திலேயே இதுபோல் இரண்டு கார்கள் மட்டும் தான் இருக்க வேண்டும். ஒன்று தன்னுடைய மகளிடமும், மற்றொன்று தன்னுடைய மருமகனிடமும் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
இது போல் மிகவும் விலையுயர்ந்த இரண்டு ஆடம்பர கார்களை தயாரித்துத் தருமாறு ஒரு மிகப்பெரிய கார் நிறுவனத்திடம் கேட்டார்.
அந்த தொழிலதிபரோ இந்த உலகத்தின் முதல் 5 பணக்காரர்களில் ஒருவர். அவருடைய மகளின் திருமணத்திற்கு நம்முடைய பிராண்ட் ஆடம்பர காரை பரிசளிக்கிறார் என்றால் அது நமக்குதான் பெருமை. மேலும் நம்முடைய பிராண்ட்க்கு இலவசமாக, ’இவரே இந்த கார் தான் வாங்கினார்’ என்ற விளம்பரமும் கிடைக்கும். அதுமட்டுமல்லாது இரண்டு கார்கள் மட்டும் தான் என்பதால் இலாபம் மட்டுமே பல கோடி ரூபாய் கிடைக்கும்.
அதனால், நாங்கள் இந்த கார்களை மிகவும் அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் செய்து தருகிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.
திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அந்த தொழிலதிபர் “கார் ரெடியா?” என்று போன் செய்து கேட்டார்.
“கார் சூப்பாராக வந்திருக்கிறது. நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தொழிற்சாலைக்கு வந்து காரை பார்க்கலாம்” என்று கார் நிறுவனத்தின் மேலாளரும் சொல்லிவிட்டார்.
அதனால், அந்த தொழிலதிபரும் கார் தொழிற்சாலைக்கு சென்று காரைப் பார்க்கிறார். காரின் வெளிப்புற தோற்றம் அவ்வளவு அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மிகவும் புதுமையாகவும், தனித்துவமாகவும் இருந்தது. அதனைப் பார்த்த உடனேயே அந்த தொழிலதிபருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. மேலும் அந்த காரின் கலரே மிகவும் வித்தியாசமாக, புதுவிதமாக பளப்பளப்பாக இருந்தது. இரண்டு காரும் ஒன்றுக்கொன்று தனித்துவமாக இருந்தது.
காரின் வெளிப் புறத்தோற்றம் இப்படி என்றால், உள்புறத்தோற்றம் அதைவிட அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. புதுவிதமான டெக்னாலஜியும் அற்புதமாக வடிவமைத்திருந்தார்கள்.
அந்த தொழிலதிபர் காரை பார்த்துவிட்டு அசந்துவிட்டார்.
எனக்குக்கூட நீங்கள் இதுபோன்ற காரை செய்துத்தரவில்லை. ரொம்ப ரொம்ப சூப்பர். நான் எதிர்பார்த்ததைவிட மிகவும் அழகான வேலைப்பாடுகளுடம் வடிவமைத்து இருக்கிறீர்கள்.
எனக்கு இந்த காரை திருமணத்தன்று காலை சரியாக 10 மணிக்கு திருமண மண்டபத்தில் நிறுத்திவிடுங்கள். துல்லியமாக பத்து மணிக்கு நிறுத்த வேண்டும். நேரத்தை மட்டும் மறந்துவிடாதீர்கள் என்று சொல்லிவிட்டு தொழிலதிபர் கிளம்பிவிட்டார்.
திருமண தேதியன்று காலையில் அனைத்து அலங்காரங்களையும் முடித்துவிட்டு எட்டு மணிக்கு காரை தொழிற்சாலையில் இருந்து வெளியே எடுத்துவர முயற்சித்தார்கள். அப்படி காரை வெளியே எடுத்து வரும்போது தான் ஒரு மிகப்பெரிய சிக்கல் அவர்களுக்கு காத்திருந்தது. காரை தொழிற்சாலையில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லை.
காரணம், தொழிற்சாலையின் நுழைவு வாயிலை விட, காரின் உயரம் அதிகமாக இருந்தது.
இப்பொழுது அந்த காரை வெளியே எடுத்தால் கண்டிப்பாக காரில் கீறல்கள் விழும். இன்னும் இரண்டு மணிநேரம் தான் இருக்கிறது. இரண்டு மணிநேரத்தில் காரை திருமண மண்டபத்தில் டெலிவரி செய்தாக வேண்டும். என்ன செய்வது என்று நிறுவனத்தின் மேலாளர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
ஒரு ஊழியர், “பரவாயில்லை. காரை நாம் கீறல்களோடு வெளியே எடுத்துவிடலாம். அதன்பிறகு பெயிண்ட் அடித்து சரி செய்துவிடலாம்” என்று சொன்னார்.
ஆனால், அது அவ்வளவு நல்ல யோசனை இல்லை.
இதுபோல் ஒவ்வொரு ஊழியர்களும் ஒவ்வொரு யோசனை சொல்கிறார்கள்.
ஆனால், எதுவுமே சரியான யோசனையாகப் படவில்லை. அந்த யோசனைகளால் சீக்கிரமாக காரை வெளியே எடுத்துவிடமுடியாது. நேரம் வேறு சென்றுக் கொண்டே இருக்கிறது.
காரை சொன்ன நேரத்திற்கு டெலிவரி செய்யவில்லை நஷ்டமாவதைப் பற்றிக்கூட கவலையில்லை. ஆனால், சொன்ன நேரத்திற்கு காரை டெலிவரி செய்யவில்லை என்ற அந்த நிறுவனத்தின் மதிப்பு மொத்தமாக குறைந்துவிடும்.
நேரம் வேறு சென்றுக் கொண்டே இருக்கிறது. அந்த குழுவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
சரியாக அந்த தொழிலதிபரின் உதவியாளரும் மேலாளருக்கு போன் செய்கிறார். இந்த மேலாளர் குழுவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.
அதே நேரத்தில் அந்த கார் நிறுவனத்தை உருவாக்கியவர் தொழிற்சாலைக்கு வந்தார். அவருக்கு சுமார் 72 வயது இருக்கும். பல வருடங்களுக்கு முன்பாகவே அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிவிட்டு இளைஞர்களிடம் நிறுவனத்தின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். இருந்தபோது நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொழிற்சாலைக்கு வந்து பார்வையிடுவார்.
அவரைப் பார்த்ததும் தொழிற்சாலையில் இருந்த மேலாளர்கள் மேலும் பயந்துவிட்டார்கள். ”என் நிறுவனத்தின் பெயரைக் கெடுத்துவிட்டீர்களே..” என்று பயங்கரமாக திட்டப்போகிறார். என்ன நடக்கப் போகிறதோ.. என்று அனைத்து ஊழியர்கள் பயத்துடன் காணப்பட்டார்கள்.
72 வயதானாலும், அந்த வயதிலும் மிடுக்கான தோற்றத்துடன் தொழிற்சாலைக்கு வந்திருந்தார். அவர் தொழிற்சாலைக்கு உள்ளே வந்து அனைவரின் முகத்தையும் பார்த்ததுமே ஏதோ பிரச்சனை என்று புரிந்துக் கொண்டார்.
”என்ன பிரச்சனை?” என்று கேட்டார்.
இது போல் காரின் உயரம் நுழைவு வாயிலின் உயரத்தை விட அதிகமாக இருப்பதால் காரை வெளியே எடுக்க முடியவில்லை என்று சொன்னார்கள்.
”எப்பொழுது டெலிவரி செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
”இன்னும் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள்.
அவர் உடனே அந்த காரை நன்றாக சுற்றி வந்து பார்த்தார். காருக்கும் அந்த நுழைவு வாயிலுக்கும் நடுவே நின்று அந்த காரின் உயரத்தை கண்ணிலேயே அளந்தார். அடுத்து அந்த நுழைவுவாயிலை ஒரு பார்வைப் பார்த்தார். உடனே அவர் முகத்தில் புன்சிரிப்பு தான்.
ரொம்ப சாதாரண விஷயம் தான்… இதற்கா இவ்வளவு நேரம் அனைவரும் குழும்பிப் போய் இருந்தீர்கள்?
நம் காரின் உயரம் அந்த நுழைவுவாயிலின் உயரத்தைவிட, ஒரு இஞ்ச் தான் அதிகமாக இருக்கிறது. நம் காரினுடைய டயரில் இருக்கும் காற்றை ஒரு இஞ்ச் குறைத்துவிட்டாலே போதும். கார் எந்த சேதாரமும் இல்லாமல் வெளியே வந்துவிடும் என்று கூறினார்.
அந்த மேலாளர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அவர் சொன்ன உடனேயே கார் டயரில் இருக்கும் காற்றை வெளியேற்றும் வேலைகள் நடந்தது. அப்படி காற்று வெளியேற்றப்பட்டதும் அந்த நுழைவுவாயிலில் இருந்து கார் சுலபமாக வழுக்கிக் கொண்டு வெளியே வந்துவிட்டது. அங்கு இருந்த ஊழியர்கள் அனைவரும் ஏதோ இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜெயித்தது போன்று ஆராவாரம் செய்தார்கள். ஒவ்வொருத்தர் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.
அங்கிருந்த மேலாளர் ஒருவர், “உங்களுக்கு மட்டும் எப்படி சார் இந்த யோசனை தோன்றியது?” என்று கேட்டார்.
அதற்கு அவர் கூறிய பதில், “முதலில் நீ உன்னையும் உன் தொழிலையும் உண்மையாக நேசி. என்னால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணமுடியும் என்று உன்னை முழுவதுமாக நம்பு. உனக்கு இதுபோன்ற வித்தியாசமான யோசனைகள் தோன்றும்.” என்று சொன்னார்.
நீங்களும் உங்களால் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும் என்று உங்களை முழுவதுமாக நம்புங்கள். உங்களாலும் மாத்தி யோசிக்க முடியும்.
All the best...!



0 comments:
Post a Comment